தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் அடிக்கடி விமர்சனங்களில் சிக்கிக் கொள்வதும், சர்ச்சைகளில் வைரலாவதும் வழக்கமாக இருந்து வருகிறது. எனினும் அவருக்கான பட வாய்ப்புகள் இருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வருபவர்களில் ஒருவர் நயன்தாரா, மற்றவர் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் இருந்து தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா, தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கிய நடிகையாக மாறினார். பிறகு நாயகியை மையமாக கொண்ட சில படங்களில் நடித்தார். அறம் மாயா இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றது.
அதன் பிறகு சில கோடிகளில் இருந்த தனது சம்பளத்தை ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை உயர்த்தி விட்டார். நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அன்னபூரணி. இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு மண்ணாங்கட்டி என்ற படத்திலும், இப்போது நடிகர் கவினுடன் ஒரு படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.
இதற்கிடையே நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். தீபிகா படுகோன் பிரியாமணி யோகிபாபு விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பாலிவுட்டில் பெரிய வெற்றியை பெற்று ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனால் தொடர்ந்து இந்தியில் நயன்தாராவுக்கு வாய்ப்பு தொடரவில்லை.
தெலுங்கு நடிகை விஜயசாந்தியை தான் முதலில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்தார்கள். அதற்கு காரணம் அவர் அதிரடி சண்டை காட்சிகளில் அசத்தினார். குறிப்பாக வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக சண்டை காட்சிகளில் ரசிகர்களை மிரட்டினார். இப்போது தமிழ் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அந்த பார்மூலாவுக்கு வர அதிரடி முடிவு செய்துவிட்டார்.
அதனால் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஒரு அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். தனக்காக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் இதுபற்றி சொல்லி, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படக்கதை இருந்தால் சொல்லுங்கள், என்றும் கேட்டிருக்கிறார். அத்துடன் சில மாதங்களாக பிரபல ஸ்டண்ட் பைட் மாஸ்டர் ஒருவரை வீட்டுக்கு வரவழைக்கு சண்டைப் பயிற்சியும் கற்று வருகிறார் நயன்தாரா என்ற தகவல் வெளியாகி உள்ளது.





