தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு படம் 2 பாகங்களாக வெளிவருவது டிரண்டிங் ஆக மாறிவிட்டது. இன்னும் சில படங்கள் 3, 4, 5 பாகங்கள் என்று கூட அடுத்தடுத்து வந்து வெற்றி பெறுகின்றன. ஆனால் இதுபோன்ற படங்கள் சில விதிவிலக்காக மட்டுமே இருக்கின்றன.
உதாரணமாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3, அரண்மனை 4 என 4 படங்கள் வெளியான நிலையில், இதில் அரண்மனை 3 மட்டுமே பெரிய வெற்றியை பெறவில்லை. அரண்மனை 4 படம் இந்த ஆண்டில் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூலை கடந்தது. இப்போது அரண்மனை 5 படம் எடுக்க சுந்தர் சி தயாராக உள்ளார்.
அதே போல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சிங்கம் 1 சிங்கம் 2 படங்கள் வெற்றி பெற்ற நிலையில் சிங்கம் 3 படுதோல்வி அடைந்தது. பசங்க படம் வெற்றியடைந்த நிலையில் பசங்க 2 தோல்வியடைந்தது. இந்தியன் படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்தியன் 2 படுதோல்வி அடைந்தது. சந்திரமுகி மெஹா ஹிட் ஆன நிலையில் சந்திரமுகி 2 தோல்வியானது.
அதே போல் மணிவண்ணன் இயக்கிய பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி, 2ம் பாகம் படுதோல்வியை சந்தித்தது. அதனால் பெரும்பாலும் 2ம் பாகம் படங்கள் என்றாலே தமிழில் படுதோல்வியை சந்திப்பது வழக்கமாகி விட்டது. ஆனால் டிமாண்டி காலனி 2 விடுதலை 2 வேலையில்லா பட்டதாரி 2 போன்ற சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
அதே நேரத்தில் தெலுங்கில் வெளியான பாகுபலி 1 பாகுபலி 2, புஷ்பா 1 புஷ்பா 2 போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கின்றன. அடுத்து காந்தாரா 2, கல்கி 2898 ஏடி 2 போன்ற படங்கள் அடுத்து வெளிவர இருக்கின்றன. இப்படி தெலுங்கில் மட்டும் 2ம் பாகம் தொடர் வெற்றிகளை பெறுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக 2ம் பாகம் படம் வெளியானால் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் முதல் படத்தின் வெற்றியை மனதில் வைத்து, அந்த கதையில் சரியான தொடர்ச்சியின்றி 2ம் பாகத்தை தமிழில் எடுக்கும்போது அது படுதோல்வியடைகிறது. தவிர, முதல் பாகத்தில் தந்த அளவுக்கு கதையில் சுவாரசியம், விறுவிறுப்பு தர இயக்குனர்கள் தவறி விடுகின்றனர். தெலுங்கில் அப்படி நடக்காமல் கவனமாக படம் எடுக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.





