தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா போன்ற சிறந்த படைப்பாளிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சேது படம் துவங்கி நந்தா பிதாமகன் நான் கடவுள் அவன் இவன் பரதேசி தாரை தப்பட்டை என வித்யாசமான படங்களை தந்து, கமர்ஷியல் வட்டத்துக்குள் சிக்காதவர் இயக்குனர் பாலா.
அவரது இயக்கத்தில் அடுத்ததாக அருண் விஜய் நடித்த வணங்கான் படம் வருகிற ஜனவரி 10ம் தேதி, பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் வாய் பேசாத கேரக்டரில் அருண் விஜய் நடித்திருக்கிறார். இதுவரை அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் வணங்கான் அவரது திரை பயணத்தில் மிக முக்கிய படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் வணங்கான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா தான். ஆனால் சில வாரங்கள் ஷூட்டிங்கில் பங்கேற்ற அவர், பிறகு இயக்குனர் பாலாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். ஆனால் கங்குவா படத்தின் படுதோல்விக்கு பிறகு, வணங்கான் படத்தை மிஸ் செய்துவிட்ட ஆதங்கத்தில்தான் சூர்யா இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த 18ம் தேதி வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா, தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் பாலாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, அருண் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். அப்போது விழா மேடையில் பாலாவுடன் அமர்ந்து சிவக்குமார் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், இயக்குனர் பாலாவிடம் சில கேள்விகளை நேரடியாக எழுப்பினார். அப்போது எந்த கேள்விக்கும் தயக்கமின்றி மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக சொன்னார் இயக்குனர் பாலா. அப்போது உங்கள் இயக்கத்தில் நடிக்க விரும்பி கமல், ரஜினி கால்ஷீட் கொடுத்தால் அவர்களுக்கு படம் பண்ணுவீங்களா என்று பாலாவிடம், சிவக்குமார் கேள்வி கேட்டார்.
அதற்கு தயக்கமின்றி பதிலளித்த இயக்குனர் பாலா, வாய்ப்பில்ல சார், அவங்களோட பாதை வேற என்னோட பாதை வேற என்றார். உடனே சிவக்குமார், உங்கள் பார்வைக்கு வந்து அகோரி மாதிரி ஒரு கேரக்டரில் நடிக்க ரஜினி கேட்டால் ஒத்துக்குவீங்களா என்றும் சிவக்குமார் கேட்டார். அதற்கு பாலா, நிச்சயமாக ரஜினி அப்படி சொல்ல மாட்டார், என்று நச் என பதில் தந்தார். ஒரு படைப்பாளியாக ரஜினி கமல் போன்றவர்களை சாதாரண கமர்ஷியல் ஹீரோக்களாக மட்டுமே பாலா பார்ப்பது அவரது அதிரடி பதிலில் வெளிப்பட்டது.





