தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டில் வெளியான மாஸ் ஹிட் படங்களில் அவர் நடித்த மகாராஜா படமும் ஒன்று. இது அவரது நடிப்பில் வெளியான 50வது படம். 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த படமாகவும் இருந்தது. தொடர்ந்து தோல்வி படங்கள் என்ற நிலையில் இருந்த விஜய் சேதுபதிக்கு கம்பேக் படமாக அமைந்தது.
இப்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். நித்யா மேனன் மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தென்காசி தூத்துக்குடி திருச்செந்தூர் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி இன்னும் 2 வாரங்களுக்கு பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட டைரக்டர் பாலாஜி தரணிதரன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அடுத்து சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
விஜய் சேதுபதி முன்னணி நடிகராக இருந்தாலும் வெகு யதார்த்தமாக பழகக் கூடியவர். பொதுவெளியில் இயல்பாக தனது கருத்துகளை பேசக்கூடியவர். சினிமா அடையாளங்கள், ஆணவம் போன்ற தோரணை இல்லாதவர் என்று பலரும் அவரை கூறுகின்றனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி தன்னைப் பற்றி பல விஷயங்களை கூறினார்.
அப்போது விஜய் சேதுபதி கூறியதாவது, நான் காலேஜ் செகண்ட் படித்த போது, மிருதங்கம் கத்துக்கலாம் என்று போனேன். என் பக்கத்தில் இருந்த ஒருவர், சூப்பராக மிருதங்கம் வாசிச்சுக்கிட்டு இருந்தார். தி நகர் பக்கம்தான் அது, போன ரெண்டு நாளில் நான் மாஸ்டரிடமே நேரடியாக கேட்டுவிட்டேன். இந்த கோர்ஸ் எத்தனை நாளைக்கு என்று கேட்டேன்.
இது கலை, கோர்ஸ் இல்லை. வாழ்க்கை முழுவதும் கத்துக்கிட்டே இருக்கணும் என்றார். அய்யோ, லைப் லாங் கிளாஸ் போகனுமான்று பயந்துட்டேன். அப்புறம் ஒரு வாரம்தான் போனேன். அப்போ எனக்கு 18 வயசு இருக்கும். நாம் எல்லாத்துக்கும் ஒரு டைம் வெச்சிருக்கோம். அதுக்குள்ள இதை புரிஞ்சுக்கலாம். அதுக்குள்ள இதை கத்துக்கலாம் என்று. ஆனால் அது அப்படி இல்லை அனுபவம் என்பது வாழ்க்கை முழுவதும் கத்துக்கறதுதான் என்று விஜய் சேதுபதி அதில் கூறியிருக்கிறார்.





