விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி ஷோ தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். பிறகு சினிமா நட்சத்திரங்களை நேர்காணல் செய்தார். விருது விழாக்களில் கோபிநாத் போன்றவர்களுடன் இணைந்து விழாவை தொகுத்து வழங்கினார். மேடை ஏறிய கலைஞர்களிடம் ஜாலியான கேள்விகளை கேட்டு விழா பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.
ஒரு கட்டத்தில் இயக்குனர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயன் நடிப்பில் மெரினா படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஓவியா நாயகியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் சதீஷ், இந்த படத்திலும் நண்பராக அறிமுகமாகி நடித்திருந்தார்.
மெரினா படத்திற்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து மனம் கொத்திப் பறவை எதிர்நீச்சல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ரேமோ என பல வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், ரசிகர்களின் கவனம் பெற்ற ஹீரோவாக மாறினார்.
ஆரம்பத்தில் காதலும் காமெடியும் கலந்த ஜாலியான படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் வேலைக்காரன் மாவீரன் டாக்டர் போன்ற படங்களில் ஆக்சன் கலந்த ஹீரோவாக தன் இமேஜை மாற்றிக்கொண்டார். அதிலும் இப்போது கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அமரன் படம், சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது.
கடந்த தீபாவளியன்று ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்திருந்தனர். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜ், அவரது மனைவி இந்து ரேபகோ வர்கீஸ் ஆகியோர் கேரக்டர்களில் இருவரும் வாழ்ந்து காட்டியிருந்தனர். இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 325 கோடி வசூலித்தது.
அமரன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒரு மாதம் முன்பு அதாவது டிசம்பர் 5ம் தேதி வெளியானது. இந்நிலையில் தற்போது வரும் பொங்கலுக்கு டிவி சேனல் ஒன்றில் ரிலீஸாகிறது. விஜய் டிவியில் வரும் பொங்கலுக்கு அமரன் படம் ஒளிபரப்பாகிறது. உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்ற அறிவிப்புடன் விஜய் டிவி 45 விநாடிகள் ஓடும் அமரன் பிரமோ வெளியிட்டு விரைவில்… என்று அறிவித்துள்ளது.





