நடிகர் விசு போல மிமிக்ரி கலைஞர்கள் யாரேனும் மேடையில் பேச ஆரம்பித்தால் அடியே கோதாவரி வீட்டுக்கு நடுவே ஒரு கோடு போடுடீ என்றுதான் பேசுவார்கள். ஏனெனில் விசு பேசிய வசனங்களில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரி கேரக்டரில் நடித்த கமலா காமேஷை பார்த்துதான் அந்த வசனத்தை பேசுவார்.
அதனால் கோதாவரி என்றால் ஆறு நினைவுக்கு வராமல், சட்டென நடிகை கமலா காமேஷ் முகம்தான் பலருக்கும் நினைவு வரும். இன்று பல நடிகைகள் 40 வயதுகளை கடந்தும் மேக்கப் உதவியால் நாயகிகளாக தமிழ் சினிமாவில் வலம் வருகின்றனர். ஆனால் இளம் வயதிலேயே அம்மா, பாட்டி வேடங்களில் பல படங்களில் நடித்தவர்தான் இந்த கமலா காமேஷ்.
சம்சாரம் அது மின்சாரம் குடும்பம் ஒரு கதம்பம் மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட படங்களில் நடிகர் விசுவுக்கு மனைவியாக நடித்திருக்கிறார். சின்னக்கவுண்டர் மணல் கயிறு கடமை கண்ணியம் கட்டுப்பாடு பொண்டாட்டி தேவை அலைகள் ஓய்வதில்லை பெண்மணி அவள் கண்மணி கடலோர கவிதைள் என பல படங்களில் அம்மா, மாமியார் கேரக்டரில் நடித்தவர்.
இவரது மகள் உமா ரியாஸ்கானும் ஒரு நடிகை தான். அன்பே சிவம் படத்தில் நடிகர் கமலுடன் பல காட்சிகளில் நடித்திருப்பார். கமலை ஒரு தலையாக காதலிப்பார். உமாவின் கணவர் ரியாஸ்கான். இவர் பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். வேண்டாம் வலிக்குது அழுதுருவேன் என்ற வின்னர் வடிவேலு காமெடி காட்சியில் நடித்திருப்பவர்தான் ரியாஸ்கான்.
இந்நிலையில் இன்று காலை, உமா ரியாஸ்கானின் அம்மா கமலா காமேஷ் 72 வயதில் உடல் நலக்குறைவால் காலமானதாக தகவல் பரவியது. அவரது நடிப்பை ரசித்த ரசிகர்களுக்கு இது பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதுகுறித்து உமா ரியாஸ்கான் உடனடியாக அது தவறான தகவல் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகை உமா ரியாஸ்கான் கூறியதாவது, என் அம்மா பற்றி வெளியான தகவல் மிகவும் தவறானது. என் அம்மா கமலா காமேஷ் நலமாக உள்ளார். என் மாமியார் ரஷீதா பானு, 72 வயதான நிலையில் உடல்நலக் குறைவு மற்றும் மூப்பு காரணமாக சென்னையில் இறந்து விட்டார். இறந்தது என்னுடைய அம்மா அல்ல, என் கணவர் ரியாஸ்கானின் அம்மா ரஷீதா பானு என்று உமா ரியாஸ்கான் தெளிவாக கூறியிருக்கிறார்.





