தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சியை கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். 12 ஆண்டுகளுக்கு முன் அவர் நடிகராக அறிமுகமான மெரினா படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் ரூ. 10 ஆயிரம். இப்போது தனது 25வது படத்தில் நடிக்க அவர் வாங்குகிற சம்பளம் ரூ. 75 கோடி என்று சொல்லப்படுகிறது.
கடந்தாண்டில் வெளியான அமரன் படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை டபுள் மடங்காக சிவகார்த்திகேயன் உயர்த்தி விட்டார். இனி அடுத்ததாக அவரது நடிப்பில் ஏஆர் முருகதாஸ் படம், சுதா கொங்கரா படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றால், ரூ. 100 கோடி சம்பளம் நடிகர்கள் வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்து விடுவார்.
ஆரம்பத்தில் காதல் காமெடி கலந்த ஜாலியான படங்களில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் மாவீரன் அயலான் படங்கள் வித்யாசமான கதைக்களத்தில் அமைந்து அவரை அடுத்த ஜானருக்கு மாற்றியது. அதே நேரத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால் அவரது இடத்தை நிரப்ப போகிறவர் சிவகார்த்திகேயன் என்ற தகவலும் கோலிவுட்டில் உலா வருகிறது.
இதற்கிடையே புரட்சித் தலைவர் எம்ஜிஆர், தனது படங்களில் மது குடிப்பது போல், சிகரட் புகைப்பது போல நடிக்க மாட்டார். அதே பாலிசியை எம்ஜிஆரின் தீவிர ரசிகரான நடிகர் ராமராஜனும் அவர் நடித்த படங்களில் கடைபிடித்தார். அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர் நடித்த படங்களில் சிகரட் பிடிக்கும் காட்சிகளில் இதுவரை நடித்தது இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஆங்கில சேனல் ஒன்றில், நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, என்னுடைய படங்களை குழந்தைகளும் அதிக அளவில் பார்க்கிறார்கள் என்பதால் தான் நான் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை விரும்புவதில்லை.
ஆனால் இயக்குனர்களிடம், படங்களில் நான் புகை பிடிப்பது போன்ற காட்சிகளை எழுதாதீர்கள் என்று எந்த கட்டுப்பாட்டையும் நான் சொல்லியது இல்லை. புகை பிடிப்பதை மையப்படுத்தும் காட்சிகளை வைக்காதீர்கள் என்று தான் சொல்வேன். ஒரு கதாபாத்திரத்திற்கு புகை பிடிப்பது போன்ற காட்சிகள் அவசியம் என்றால், அதனை செய்ய நான் தயார்தான் என்று கூறி இருக்கிறார். இப்படி திடீருன்னு தன் கொள்கையை மாத்திட்டாரே என எஸ்கே ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.





