தமிழ் சினிமாவில் தனக்கென தனி தடத்தை பதித்தவர் அஜித் குமார். இங்கு சில நடிகர்களை மட்டும் தான் நாம் பொது வெளியிலும், சமூக தளத்திலும் அணுக முடியாது. அதில் மிக முக்கியமானவர் அஜித் குமார். இதன் காரணமாகவோ என்னவோ அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் இங்கு இருக்கிறது. எது வேண்டாம் என்று அஜித்குமார் விலகுகிறாரோ அதுதான் தங்களுக்கு பிடித்திருப்பதாக கூறி ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
இருப்பினும் தனக்கான கோட்பாட்டில் மிகவும் கவனமுடன் அஜித் குமார் இருந்து வருகிறார். அவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து, அதற்கு மன்றமும் செயல்பட்ட நிலையில், தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார் அஜித்குமார். இது தமிழ்நாட்டில் எந்த நடிகரும் செய்யாத ஒரு துணிச்சலான முடிவு.
அப்போதே அவரை பலரும் பார்த்து வியந்தார்கள். அது மட்டுமல்ல, சமூக வலைதளத்தில் இருந்து கொண்டு கருத்துக்களை தெரிவிப்பது, பொதுவெளியில் தனது ரசிகர்களை சந்திப்பது என எந்த ஒரு வேலையிலும் அவர் ஈடுபட மாட்டார். இதற்காகவே ரசிகர்கள் அவரைச் செல்லமாக தல என்று அழைத்து வந்தனர்.
தீனா திரைப்படம் வெளியாகும் போது அதில் நடித்த, மகாநதி சங்கர்தான் முதன் முதலில் அஜித்குமாரை தல என்று கூறியிருந்தார். அதன் பிறகு பட்டித் தொட்டி எங்கும் இந்தப் பெயர் போய் சேர்ந்தது. ஆனால் தனக்கு இந்த பட்டம் வேண்டாம் என்று தூக்கி எறிந்தார் அஜித்குமார். அவரது இந்த முடிவு பலரும் திரும்பி பார்க்கும் வகையில் அமைந்தது.
ஆனாலும் அஜித் ரசிகர்கள் அவரை விட்டதாக தெரியவில்லை. பொது இடங்களில் எல்லாம் ஒன்று திரண்டு கடவுளே அஜித்தே என்று கோஷம் போட ஆரம்பித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இது அஜித் குமாரின் கவனத்திற்கு செல்ல தனக்கு இந்த செயல் மிகவும் வருத்தத்தை அளித்திருப்பதாக தெரிவித்தார். இப்படியான சூழலில் தற்போது துபாயில் நடைபெறும் கார்பந்தயத்தில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.
இதில் ஒரு பிரிவில் அவரது அணி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் அஜித் குமார் அங்கிருந்து ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், அஜித் வாழ்க விஜய் வாழ்க என்றே கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள். எப்போது நீங்கள் வரப் போகிறீர்கள். நான் அவர்களின் அன்புக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். ஆனாலும் கூறுகிறேன் தயவு செய்து உங்கள் வாழ்க்கையை பாருங்கள். அவர்கள் வாழ்க்கை நன்றாக இருப்பதை பார்த்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். வாழ்க்கை மிகச் சிறியது. அதனால் இப்போதுள்ள தருணத்தை அனுபவியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.





