நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு நவம்பரில் வெளியான படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படம் பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சூர்யா நடித்த படங்களிலேயே மிக மோசமான படம் என்ற விமர்சனம்தான் கிடைத்தது. ரூ. 150 கோடி வசூலை படம் தாண்டவில்லை.
அதே நேரத்தில் இறுதிச்சுற்று சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆனார். மதுரையில் சில வாரங்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், படத்தில் இந்திக்கு எதிரான காட்சிகள், கதைக்களமும் அதுதான் என்பதால் அந்த படத்தை விட்டு சூர்யா அதிரடியாக விலகினார்.
ஏனெனில் சூர்யா மனைவி ஜோதிகா மும்பையை சேர்ந்தவர். இந்தியில் கர்ணா என்ற மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கவும் சூர்யா கமிட் ஆகியிருந்தார். அதனால் பாலிவுட்டில் தடம் பதிக்க வேண்டிய நிலையில் இந்தி எதிர்ப்பு படத்தில் நடிக்க கூடாது என்ற முடிவில் அந்த படத்தில் இருந்து விலகினார். அதே போல் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் கமிட் ஆகி பிறகு சூர்யா விலகினார்.
இந்த சூழலில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படம் உருவாகிறது. இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தயாரிப்பாளர் தாணு, அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது என்று சூர்யாவுக்கும், வெற்றிமாறனுக்கும் இடையில் அவர் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் மிக விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்பது உறுதியாகி விட்டது. இந்த படத்தில் நாயகனாக நடிக்கப் போவதும் சூர்யாதான் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. அதே போல் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் இந்த படத்தில் நடிக்கப் போவதும் இயக்குனர் அமீர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுவை மையப்படுத்தி உருவாகும் வாடிவாசல் படத்திலும் பல இடங்களில் உள்ளூர் அரசியல் பேசப்படுகிறது. அதே போல் இந்தி மொழி எதிர்ப்பு சார்ந்த காட்சிகளும் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி திணிப்பை எதிர்க்கும் கதைக்களம் கொண்ட புறநானூறு படத்தில் நடிக்க மறுத்த சூர்யா, அதே விஷயங்கள் கொண்ட வாடிவாசல் படத்தில் மட்டும் எப்படி நடிக்கிறார் என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர்.





