இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக உள்ளார். சித்திரம் பேசுதடி அஞ்சாதே நந்தலாலா துப்பறிவாளன் சைக்கோ போன்ற ரசிக்கும்படியான நல்ல படங்களை தந்தவர். சவரக்கத்தி மாவீரன் லியோ போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
சமீபத்தில் பாட்டல் ராதா என்ற படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் திரளாக கலந்துக்கொண்டனர். அந்த விழாவில் பங்கேற்ற லிங்குசாமி வெற்றிமாறன் அமீர் பா ரஞ்சித் போன்ற தமிழ் சினிமாவின் ஆளுமை மிக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பிஎல் தேனப்பனும் அமர்ந்திருந்தனர்.
இந்த விழாவில் மேடையில் பேசிய இயக்குனர் மிஷ்கின், நான் ஒரு பெரிய குடிகாரன், மதுவை ரசித்து ருசித்து குடிப்பவன். இளையராஜா பாடல்களை பாடினாலே எனக்கு எங்கிருந்தாவது குவாட்டர் பாட்டல் வந்து விடும். குடி இல்லாத நாடே கிடையாது என்று மது குடிப்பதே சந்தோஷம் என்ற பாணியில் பேசினார்.
இதற்கிடையே அவ்வப்போது அவர் சில தகாத கெட்ட வார்த்தைகளையும் பேசினார். பொது மேடையில் பெண்கள் அதிகம் பேர் இருந்த அந்த சூழலில் இயக்குனர் மிஷ்கின் இப்படி பலமுறை கெட்ட வார்த்தைகளை உச்சரித்தது அங்கிருந்தவர்களை பெரிய அதிர்ச்சியில் தள்ளியது. பலரும் முகம் சுளித்தனர்.
தாஸ்தாவஸ்கி, லியோ டால்ஸ்ராய், சேகுவேரா போன்ற பெரிய சிந்தனை ஆளுமை மிக்க எழுத்தாளர்களின் வாசிப்பாளராக தன்னை காட்டிக்கொள்ளும் மிஷ்கின் ஒரு படத்தின் விழா மேடையில் இப்படி அருவறுக்கத்தக்க வகையில் கெட்ட வார்த்தைகள் பேசியது தமிழ் சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறுகையில், மேடையில் வெற்றிமாறன் அமீர் பா ரஞ்சித் லிங்குசாமி போன்ற பெரிய இயக்குனர்கள் இருந்த நிலையில், மிஷ்கின் இப்படி கெட்ட வார்த்தைகள் பேசியதை உடனே கண்டித்திருக்க வேண்டும். தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்கம் கண்டிப்பாக இதற்கு கண்டனமும் வருத்தமும் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.





