இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியான படம் கங்குவா. சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர். ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு சில காட்சிகளில் வந்து காமெடி செய்தனர். கேமியோ ரோலில் கார்த்தியும் நடித்திருந்தார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக 12 படங்களில் சூர்யா நடித்துள்ளார். இதில் ஜெய்பீம், சூரரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி வணிகரீதியான வெற்றியை பெற்றது, ஆனால் தியேட்டரில் வெளியான சூர்யாவின் 10 படங்களும் தோல்வியை சந்தித்தது.
காப்பான் அஞ்சான் 24 தானா சேர்ந்த கூட்டம் பசங்க 2 எதற்கும் துணிந்தவன் மாசு என்கிற மாசிலாமணி மாற்றான் சிங்கம் 3 கங்குவா உள்ளிட்ட 10 படங்களும் படுதோல்வி அடைந்த நிலையில், சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கார்த்திக் சுப்பராஜ் படம், ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் படங்கள் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
அதிலும் பெரிய அளவில் பான் இந்தியா படமாக உருவான, 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படத்துக்கு கிடைத்த மிக மோசமான விமர்சனம் என்பது சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தது. சூர்யா சிறப்பாக நடித்திருந்தாலும் படத்தின் கதை சொதப்பியதே முக்கியமாக தோல்விக்கு காரணமாக இருந்தது.
இந்நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள கங்குவா படத்தை பலரும் பார்த்து, அந்தளவுக்கு படம் மோசம் இல்லை என்று விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் கே பாக்யராஜ் கங்குவா படம் குறித்து படம் வெளியாகி ஒரு மாதமான நிலையில் இப்போது சென்னையில் நடந்த 22வது தேசிய திரைப்பட விழாவில், தனது விமர்சனத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கே பாக்யராஜ் பேசியதாவது, கங்குவா படத்தை தியேட்டரில் பார்த்தேன். ஒரு சில திரைக்கதை குறைபாடுகளை தவிர கங்குவா படம் அருமையாக உள்ளது. கங்குவா நல்ல திரைப்படம்தான். அவ்வளவு பெரிய உழைப்பு அந்த படத்தில் இருந்தது. படத்தில் சிறுசிறு குறைகளை விமர்சிக்கலாம். அந்த படத்தை பார்க்கவே கூடாது என சிலர் விமர்சிப்பது தவறான விஷயம். நம்முடைய படத்தை நாமே வீழ்த்தக் கூடாது. பொறுப்புடன் விமர்சிக்க வேண்டும் என்று, கே பாக்யராஜ் பேசியிருக்கிறார்.





