தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒருவராக இசைஞானி இளையராஜா இருந்து வருகிறார். இதுவரை பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, 1300 க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். விரைவில் அவரது வாழ்க்கை வரலாறு படமும் உருவாக உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க உள்ளார்.
இளையராஜாவின் இசையை, பாடல்களை ரசிக்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவரது பாடல்களும் இசையும் கடந்த 47 ஆண்டுகளாக பட்டிதொட்டி எங்கும் பரவி கிடக்கிறது. இளையராஜா இப்போது வாலியன்ட் சிம்பொனி என்னும் இசையை உருவாக்கி உள்ளார். இந்தியாவில் இவர் மட்டுமே முதன்முறையாக சிம்பொனியை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவராக இருக்கிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இசைஞானி இளையராஜா கூறியதாவது, நான் இசை அமைத்த பல பாடல்களில் நான் வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அதை உங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். இசையமைப்பாளர் பாக் மொசார்ட் பீத்தோவன் பெயர்கள் உங்களுக்கு எப்படி தெரியும். அவர்களைப் பற்றி எல்லாம் யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். நான்தான் அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.
இசைத்துறையில் பல விஷயங்களை நான் மட்டுமே உருவாக்கி உள்ளேன். ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஒரு இசை ரசிகனுக்கு பல மாதிரியான உலக இசையை ரசிகர்களுக்கு என் பாடல்களின் மூலம் நான் அறிமுகம் செய்திருக்கிறேன். நான் சிம்பொனி இசையை உருவாக்கி இருக்கிறேன் என்றால் எனக்குள் எப்பேர்ப்பட்ட இசை ஆர்வம் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் பலருக்கும் இதனால் என் மீது வயிற்றெரிச்சல் தான் ஏற்படுகிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் என் இசை இருக்கிறது. நீங்க கேட்ட உடனே நான் இசையை கொடுக்கணுமா, அப்படி கொடுத்தால் நான் சரவணபவன் ஆகிவிடுவேன். என் இசையை கேட்டு குழந்தை உயிர் பிழைத்துள்ளது. யானைக் கூட்டம் என் பாடலைக் கேட்க வந்துள்ளது. இதைச் சொன்னால் அவர் தலைக்கணம் மற்றும் கர்வம் அவருக்கு அதிகம் என்றுதான் சொல்வார்கள்.
கர்வமும் தலைக்கணமும் எனக்கு வராமல் வேறு யாருக்கு வரும். எனக்குத்தான் கர்வம் வரணும். எனக்கு திமிர் அதிகமாக தான் இருக்கும். உலகத்திலேயே யாரும் செய்ய முடியாததை நான் செய்துள்ளேன். அப்போ எனக்கு தானே திமிர் வரவேண்டும்? வேலை தெரிந்தவர்களிடம் மட்டுமே கர்வம் இருக்கும் என்று இளையராஜா அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இளையராஜா பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





