தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. எம்ஜிஆர் சிவாஜி கணேசன் படங்களில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் மயிலுவாக வந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சிவப்பு ரோஜாக்கள் போக்கிரி ராஜா அடுத்த வாரிசு ஜானி மீண்டும் கோகிலா வாழ்வே மாயம் என பல படங்களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் என நடித்த ஸ்ரீதேவி ஒரு கட்டத்தில் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். அப்போது நடிகர் அனில் கபூர் அண்ணன் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஜான்வி கபூர் குஷி கபூர் என்ற 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாத்ரூமில் மர்மமான முறையில் நடிகை ஸ்ரீ தேவி இறந்து கிடந்தார். அவரது மறைவு குறித்து எப்போதுமே சிலர் சர்ச்சையை எழுப்பி வருகின்றனர். அடிக்கடி இது இணையத்தில் வைரலாகியும் வருகிறது. ஆனால் மது போதையில் இருந்த அவர் பாத்டப்பில் தவறி விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் தமிழில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் மிகவும் விரும்புகின்றனர். அவரது தந்தை போனிகபூர் தயாரித்த சில படங்களில் அஜீத்குமார் நடித்த நிலையில், ஜான்வி கபூர் அந்த படங்களில் நாயகியாக நடிக்க மறுத்துவிட்டார்.
இந்தியில் நடிகர் சூர்யா கர்ணன் என்ற படத்தில் நடிப்பதாக தகவல் இருந்த நிலையில், சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க சம்மதித்ததாக ஒரு தகவல் பரவியது. ஆனால் கங்குவா படம் தந்த தோல்வியால், கர்ணன் படம் கைவிடப்பட்டதால், சூர்யா ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் போய்விட்டது.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் ஒரு தமிழ் வெப் சீரியலில் நடிகை ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெப் சீரியலை இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சற்குணம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் படைப்பாளி. களவாணி வாகை சூடவா நையாண்டி சண்டிவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். மஞ்சப்பை என்ற படத்தை தயாரித்தும் இருக்கிறார். ஜான்வி கபூர் நடிக்கும் இந்த தமிழ் வெப் சிரீஸ் நாயகியை மையப்படுத்தி முக்கிய கதை என்பதால், ஜான்வி கபூர் விரும்பி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.





