இந்தி மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இப்போது தமிழிலும் முன்னணி நடிகையாக மாறி வருகிறார். விஜயுடன் பீஸ்ட் ஜனநாயகன் படங்களில் நாயகியாக நடித்துள்ள அவர், தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் சூர்யாவின் காதலியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.
ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறியாத முக்கிய விஷயம், பூஜா ஹெக்டே நடிகையாக அறிமுகமானது முதன் முதலில் தமிழ் படத்தில்தான். கடந்த 2012ம் ஆண்டில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் முகமூடி. ஜீவா நாயகனாக, நரேன் வில்லனாக நடித்த இந்த படத்தில் கதாநாயகியாக ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர்தான் பூஜா ஹெக்டே.
இரவு நேரங்களில் தனியாக வீடுகளில் வசிக்கும் வசதியான குடும்பங்களை குறிப்பாக வயதான தம்பதியரை கொடூரமாக கொன்று வீட்டில் உள்ள நகை பணத்தை மொத்தமாக கொள்ளையடிக்கும் முகமூடி கும்பல் குறித்த படம்தான் முகமூடி. இதில் வில்லனாக நரேன் முகமூடி கொள்ளையனாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
தொடர்ந்து பூஜா ஹெக்டே தமிழில் வாய்ப்பில்லாததால் இந்தி தெலுங்கு என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். தமிழிலும் இப்போது தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ரெட்ரோ படத்தில் நடித்தது குறித்து ஒரு நேர்காணலில் பூஜா ஹெக்டே பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது, ரெட்ரோ படத்தில் நான் நடித்துள்ள கேரக்டர், இதுவரை நடித்த பாத்திரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். ராதே ஷியாம் என்ற படத்தில் நான் இரண்டு எமோஷனல் காட்சிகளில் நடித்திருந்தேன். அந்த காட்சிகள்தான் எனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்தது.
ராதே ஷியாம் படத்தில் நான் நடித்த அந்த 2 காட்சிகளை பார்த்த பிறகுதான், ரெட்ரோ படத்தில் நான் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கே இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வந்திருக்கிறார். அவரே தான் இந்த தகவலை என்னிடம் சொன்னார். விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்தேன். இப்போது மீண்டும் அவருடன் ஜனநாயகன் படத்தில் நடிப்பது மிகவும் பிடித்திருக்கிறது, என்று பூஜா ஹெக்டே கூறியிருக்கிறார்.





