லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் திரிஷா நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு பின், நேற்று விடாமுயற்சி படம் ரிலீஸானது. துணிவு படத்துக்கு பின் 25 மாதங்கள் கழித்து வெளியான அஜீத்குமார் படத்தை திரையில் காண ஏகே ரசிகர்கள் தவம் இருந்தனர் என்றால் அது மிகையல்ல. ஏகே ரசிகர்களுக்கு நேற்றுதான் தீபாவளி, பொங்கல், நியூ இயர் பண்டிகை எல்லாமே.
விடாமுயற்சி படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு படம் திருப்தி தரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அதிலும் படத்தின் பல காட்சிகளில் மாஸ் ஹீரோ அஜீத்குமாரை டம்மியாக்கி மகிழ் திருமேனி அவரது இமேஜையே டேமேஜ் ஆக்கி விட்டதாகவும் ஒரு கடுமையான விமர்சனமும் எழுந்துள்ளது.
நடிகர்கள் ரஜினி கமல் விஜய் அஜீத் சிம்பு சூர்யா போன்ற டாப் ஹீரோக்கள் என்றாலே அவர்கள் விரும்பும் காட்சிகளை குறிப்பாக மாஸ் காட்டும் சீன்களை படத்தில் இடம்பெற செய்வது இயக்குனர்களின் வழக்கம். இந்த படத்தில் அப்படி எந்த காட்சியிலும் மாஸ் காட்டும் அஜீத்குமாரை ரசிகர்கள் பார்க்க முடியவில்லை.
வில்லன்களிடம் கெஞ்சுவது, மோசமாக அடிவாங்குவது என பல காட்சிகளில் ஏகே ரசிகர்களே நொந்துபோகும் அளவுக்கு அஜீத்குமாரை நடிக்க செய்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. தடம் தடையற தாக்க போன்ற நல்ல படங்களை தந்த மகிழ் திருமேனிக்கு அஜீத்தை வைத்து மாஸ் படம் தரத் தெரியாமல் போய்விட்டது என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
இதற்கிடையே விடாமுயற்சி படத்தில், வேறு ஒருவர் மீது காதல் இருப்பதாக கூறி தனது கணவர் அஜீத்குமாரை அவரது மனைவி திரிஷா பிரிவது போன்ற கதை படத்தில் வருகிறது. மாஸ் ஹீரோவை, ஹீரோயின் அதுவும் மனைவியே பிடிக்கவில்லை என்பது, அவரை விவாகரத்து செய்ய விரும்புவது போன்ற காட்சிகள் வருகின்றன. வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டில் வெளியான படம் மங்காத்தா. இதில் திரிஷாவை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றியிருப்பார் நடிகர் அஜீத்குமார்.
அதனால்தான் விடாமுயற்சி படத்தில், தனது 13 ஆண்டுகால பழியை தீர்க்கும் விதமாக கணவர் அஜீத்குமாரை விட்டு பிரிந்து காதலருடன் செல்ல விரும்புவதாக கூறி திரிஷா பழிவாங்கி விட்டார் என மங்காத்தா, விடாமுயற்சி படங்களை டீ கோட் செய்து ஒரு ரசிகர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற காட்சியில், இதென்னடா புது புரளியா இருக்குது என்று வடிவேலு புலம்பியது போல, ஏகே ரசிகர்கள் இதுகுறித்து புலம்பி வருகின்றனர். விடாமுயற்சி டைரக்டரே இப்படி யோசித்திருக்க மாட்டாரே என்றும் கமெண்ட் செய்கின்றனர்.





