- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படத்தில் அஜீத் குமார் நடிக்க அதுதான் காரணம், அவரை அந்த விஷயம் ரொம்பவும் பாதித்திருக்கிறது...

விடாமுயற்சி படத்தில் அஜீத் குமார் நடிக்க அதுதான் காரணம், அவரை அந்த விஷயம் ரொம்பவும் பாதித்திருக்கிறது – மகிழ்திருமேனி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

துணிவு படத்துக்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து நேற்று அஜீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியாகி உள்ளது. ஒரு தரப்பினர், படத்தை வெகுவாக பாராட்டுகின்றனர். ஒரு தரப்பினர், படம் குறித்த எதிர்மறை விமர்சனத்தை கூறி வருகின்றனர். ஆனாலும் அஜீத்குமாரை பொறுத்த வரை அவரது நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தே இருக்கிறது. கதை திரைக்கதை தான் சொதப்பல் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது.

விடாமுயற்சி படம் குறித்தும் படத்தின் அஜீத்குமார் குறித்தும் இயக்குனர் மகிழ் திருமேனி ஒரு நேர்காணலில் கூறியதாவது, அஜித்குமார் சார் என் மீது வைத்த நம்பிக்கைக்கு என் இதயம் நிறைந்த நன்றி. நாங்கள் ஆரம்பத்தில் பலமுறை சந்தித்து பேசிய போது பெண்களை மதிக்கும் ஒரு படத்தில் நடிக்க விரும்புவதாக அடிக்கடி என்னிடம் அஜீத்குமார் கூறுவார்.

எளிய குடும்பப் பின்னணியில் வளர்ந்த எனக்கு அவர் இதை சொல்லும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. பெண்களுக்கான கதை எனும்போது லைகா தயாரிப்பு நிறுவனமும் மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவித்தனர். மிகப்பெரிய கமர்சியல் நடிகர்கள் படத்தில் இருந்த போதும் இந்த கதைக்கு லைகா நிறுவனம் நம்பி சம்மதித்தது சிறப்பான விஷயமாக இருந்தது.

அஜீத் சாரும் தன்னுடைய சினிமா பயணத்தில் நிறைய புது விதமான கதைகளில், படங்களில் நடித்திருக்கிறார். அவர் தன் சினிமா பயணத்தில் வளர்ந்து வரும்போதே வாலி என்ற படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதேபோல முகவரி என்ற படத்திலும் கனவுகளும் லட்சியங்களும் கொண்ட ஒரு சாதாரண இளைஞனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். விஸ்வாசம் போன்ற மாஸ் ஹிட் படம் கொடுத்த பிறகும் கூட நேர்கொண்ட பார்வை போன்ற படத்தை தேர்ந்தெடுத்து அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மீதான வன்முறைகள் குறித்தான செய்தி அஜீத்தை எப்போதுமே மனதளவில் பாதித்திருக்கிறது. அதனால் அது பற்றிய வலுவான மெசேஜ் விடாமுயற்சி படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இருந்தாலும் அஜீத் போன்ற மாஸ் நடிகருக்கான சில கமர்சியல் விஷயங்களை ரசிகர்கள் திரையில் எதிர்பார்ப்பார்களே என்ற எண்ணமும் எனக்குள் இருந்தது.

ஆனால் அஜீத்குமார் என்னிடம் வந்து, இந்த கதை அர்ஜூன் என்ற மிடில் கிளாஸ் மனிதனைப் பற்றியது. வேறு வழியே இல்லை என்றால் தவிர வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று நினைக்காதவன் தான் அர்ஜூன். சரியான படத்தில் நடிக்கும் போது என் ரசிகர்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று என்னிடம் கூறினார். அந்த நம்பிக்கை சரிதான் என என்னால் உணர முடிகிறது விடாமுயற்சி படத்துக்கு கிடைக்கும் பாசிட்டிவ் ரிசல்ட் தான் இயக்குனருக்கு நிறைவான விஷயம். ரசிகர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று மகிழ் திருமேனி கூறியிருக்கிறார்.

சற்று முன்