குறும்படங்களை இயக்கி அதன் மூலம் அடையாளம் காணப்பட்ட பிரதீப் ரங்கநாதன், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோமாளி படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். ஜெயம் ரவி காஜல் அகர்வால் கேஎஸ் ரவிக்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றது.
தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அவரை நடித்து இயக்கிய படம் லவ் டுடே. இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ரூ. 100 கோடி வசூலித்த சூப்பர் ஹிட் படமாக இருந்தது. இளம் காதலர்கள் செல்போன்களை மாற்றிக்கொண்டால் நடக்கும் பிரச்னைகளை காமெடி கலந்து சொன்ன இந்த படத்தை டீன் ஏஜ் ரசிகர்கள் கொண்டாடினர்.
இப்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வரும் படம் டிராகன். அனுபமா பரமேஸ்வரன் கயாடு லோஹர் இவானா ஜார்ஜ் மரியன் கேஎஸ் ரவிக்குமார் கௌதம் மேனன் மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், ஒரே வாரத்தில் 80 கோடி ரூபாய் வசூலில் கடந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, என்னுடைய வெற்றியை பார்த்து சிலர் வாழறான் டா என்று சொல்லும் போது அப்பப்போ கொஞ்சம் பீல் ஆகும். ஒருமுறை டப்பிங் பண்ணிட்டு வெளியே நின்னுட்டு இருந்தோம். அப்போ வந்து ஒரு பையன் என்கூட போட்டோ எடுத்துக்கிட்டு, நானும் உங்க மாதிரி ஆவணும்ண்ணா, கண்டிப்பா ஆவேன் என்று சொல்லிட்டு போனான்.
அப்போ நான் கொஞ்சம் நிறைய விஷயங்கள் யோசிக்க ஆரம்பிச்சேன். அந்த வாரம் முழுக்க யோசிச்சேன். இப்படி நிறைய பேர் வந்து நம்மை அவங்களை மாதிரி ஆகணும் அப்படீன்னு பார்க்கும் போது ரொம்பவும் பொறுப்பானவனாக இருக்கணும் அப்படீன்னு தோண ஆரம்பிச்சுது.
இப்போ அந்த ரெஸ்பான்ஸ்பிலிட்டி இன்னும் அதிகம் ஆயிருக்கு. அதனால் ரொம்பவும் பார்த்து பார்த்து பண்ண வேண்டியதா இருக்கு என்று பிரதீப் ரங்கநாதன் கூறியிருக்கிறார். கோமாளி லவ்டுடே டிராகன் என 3 சூப்பர் ஹிட் படங்களை தந்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





