தமிழ் சினிமாவில் தனக்கென கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர்களில் அசோக் செல்வன் கெட்டிக்காரர் என்றே கூறலாம். சூது கவ்வும் திரைப்படம் தான் அவருக்கு முதல் திரைப்படம். அதில் நண்பர்கள் கூட்டணியில் ஒருவராக நடித்திருந்தார் அசோக் செல்வன். விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த அந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
பிறகு தனக்கான கதைகளை தேடி தேடி நடிக்க ஆரம்பித்த அவருக்கு நல்ல பெயரையும் பாராட்டையும் பெற்றுக் கொடுத்தது தெகிடி திரைப்படம். திரில்லர் திரைப்படமாக எடுக்கப்பட்ட இது, அந்த நேரத்தில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ரசிகர்களால் பின்னாளில் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அசோக் செல்வனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் ஓ மை கடவுளே. தற்போது டிராகன் என்னும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்திருக்கும் அஸ்வந்த் மாரிமுத்து தான் இதற்கு இயக்குனர். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வேறு ஒரு பரிணாமத்தில் அதை கூறியதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது.
விவாகரத்துக்கு முடிவு எடுக்கும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் திடீரென, கடவுள் வந்து மறு வாய்ப்பு கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதை மிக அழகாக கூறியிருந்தார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சூழலில் அடுத்ததாக, அசோக்செல்வன் நடிப்பில் பாராட்டைப் பெற்றது போர் தொழில்.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் சரத்குமாரும் அசோக் செல்வனும் சேர்ந்து கலக்கி இருப்பார்கள். திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இருவரும் காவல்துறை அதிகாரிகளாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடித்திருக்கும் தக்லைப் திரைப்படத்தில் அசோக்செல்வனும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அறிமுக இயக்குனர் எடுக்கும் இந்தத் திரைப்படத்தை, குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களை உருவாக்கிய மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் குறித்த அடுத்த கட்ட தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





