தமிழ் சினிமாவில் வசூலில் வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் படங்கள், வந்த சுவடு தெரியாமல் தியேட்டர்களை விட்டு காணாமல் போய் விடுகின்றன. போட்ட பட்ஜெட்டுக்கு மேல் சில கோடிகள் லாபம் கிடைத்தாலே போதும் என்று எதிர்பார்ப்பில் திரைக்கு வரும் படங்கள், வசூலில் தரமான சம்பவம் செய்து விடுகின்றன.
குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களாக உருவான பார்க்கிங் குட்நைட் லப்பர் பந்து குடும்பஸ்தன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் அபார வரவேற்பை பெற்று, படத்தின் பட்ஜெட்டை விட பலமடங்கு லாபத்தை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்தன. படத்தின் கதை, திரைக்கதை படத்தை வேற லெவலில் ஜெயிக்க வைத்தன.
அதே நேரத்தில் 2000 கோடி ரூபாய் வசூலிக்கும், நெருப்பு மாதிரி இருக்கும் என்று கூறப்பட்ட கங்குவா படம், மிக மோசமான படமாக விமர்சிக்கப்பட்டது. 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்த்த விடாமுயற்சி படமும் பலத்த தோல்வியை சந்தித்தது. பெரிய ஸ்டார் நடித்த படங்களாக இருந்தும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பலத்த நஷ்டத்தை தந்திருக்கின்றன.
கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்த நிலையில், ரசிகர்களை முழுமையாக நம்பி அவர் நாயகனாக களம் இறங்கி நடித்த படம் லவ் டுடே. ரூ. 100 கோடி வசூலித்த மாபெரும் வெற்றிப் படமாக அவருக்கு அமைந்தது. இந்த படத்தில் இவானா நாயகியாக நடித்திருந்தார். சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு போன்றவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
ஓ மை கடவுளே படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதனின் நெருக்கமான நண்பர். அவரது இயக்கத்தில் 2வது படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் டிராகன். கடந்த பிப்ரவரி 21ம் தேதி இந்த படம் வெளியான நிலையில், 3 நாட்களில் உலகளவில் படத்தின் வசூல் ரூ. 50 கோடியை கடந்தது.
தொடர்ந்து 10 நாட்களில் டிராகன் படத்தின் வசூல் உலகளவில் ரூ. 100 கோடியை கடந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே வசூல் ரூ. 75 கோடியை கடந்தது. இப்போது 13 நாட்களில் டிராகன் படத்தின் மொத்த வசூல் உலகளவில் ரூ. 120 கோடியாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 90 கோடியாகவும் உள்ளது. இதே ஸ்பீடில் போனால் தமிழ்நாட்டிலேயே டிராகன் ரூ. 100 கோடி சில தினங்களில் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





