தமிழ் சினிமாவில் இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகத் திறமை மூலம் அடையாளம் காணப்படுபவர் செல்வராகவன். தனுஷின் சகோதரரான இவர், சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து பெற்றார். கீதாஞ்சலி என்பவர் உடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவர், மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார்.

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், தனது அடுத்த திரைப்படம் ஆன காதல் கொண்டேனை எடுத்து பலரையும் கவனிக்க வைத்தார். நடிகர் தனுஷிற்கும், செல்வராகவனுக்கும் காதல் கொண்டேன் திரைப்படம், மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது. இதன்பிறகு அவர் எடுத்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம், தமிழ் சினிமாவையே உலுக்கியது.
ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்ட ஒரு நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், காதலை மையப்படுத்தி இளைஞர்களை கலங்கடித்தது. இதைத்தொடர்ந்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மயக்கம் என்ன, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன், என் ஜி கே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார் செல்வராகவன்.

தற்போது இயக்கம் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான சாணி காயிதம் திரைப்படத்தில் செல்வராகவனின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. நானே வருவேன் திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், பீஸ்ட், பகாசூரன் படங்களில் நடித்தார். விஷால் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் செல்வராகவன் இடம்பெற்றுள்ளார்.
தற்போது தனது தம்பி தனுஷ் இயக்கும் 50 வது படத்திலும் செல்வராகவன் இடம்பெற்று இருக்கிறார். இது மட்டுமல்லாமல், 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படி படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் செல்லும் போது தனது பர்ஸ் தொலைந்து விட்டதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போது எனது பர்ஸை தவறவிட்டு விட்டேன். ஆனால் அது தொலைந்த 15 நிமிடங்களிலேயே, ஏர் இந்தியா நிறுவனத்தினர் என்னை தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு மெயில் மூலம் எனது விவரங்களை அனுப்பினேன். இதைத்தொடர்ந்து எனது பர்ஸ் எனக்கு கிடைத்து விட்டது. அவர்களின் சேவையால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.





