நடிகர் விஜய் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நடிகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். நாளைய தீர்ப்பு படத்தில் அவர் 1992ம் ஆண்டில் அறிமுகமானார். இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக கூறப்படுகிறார்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் பங்கேற்ற விஜய், தனது வீட்டிலேயே அந்த பேட்டியை கொடுத்திருந்தார். அப்போது நான் தினமும் அசைவம் விரும்பி சாப்பிடுவேன். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் அசைவம் கூடாது என்று சொல்லி விட்டனர். அதனால் அந்த நாட்களில் மட்டும் ஷூட்டிங்கில் சாப்பிட்டு விடுவேன் என்று கூறியிருந்தார்.
வழக்கமாக திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் என கட்சிகள் சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள் என்றாலே அங்கு கமகமக்கும் மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி மட்டன் குழம்பு மட்டன் ப்ரை சிக்கன் வருவல் முட்டை மீன் வருவல் சிக்கன் ப்ரை சிக்கன் 65 என ஏகப்பட்ட அசைவ ஐயிட்டங்கள் தான் கட்சியினர் தொண்டர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்படும்.
ஆனால் நடிகர் விஜய் 2 ஆண்டுகளாக பங்கேற்ற 10ம் வகுப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வி விருது வழங்கும் விழாக்களில் சைவ விருந்துதான் பரிமாறப்பட்டது. நீண்ட தூரம் பயணித்து வரும் பள்ளி மாணவ மாணவியருக்கு அசைவம் தர விரும்பாமல் சைவம் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று பார்த்தால் இப்போது கட்சி கூட்டங்களிலும் அதே சைவ விருந்துதான் வழக்கமாக பரிமாறப்படுகிறது.
கடந்த முறை விக்ரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடத்த அனுமதித்த உதவிய விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் குடும்பங்கள் அந்த மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் மாநாடு ஏற்பாட்டாளர்களை பனையூருக்கு வரவழைத்து தனது கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜய் விருந்து கொடுத்தார். அது அனைத்தும் சைவ உணவு வகைகளாக இருந்ததால் இது என்னய்யா விருந்து என பலரும் விமர்சித்தனர்.
அதே போல் கடந்த மாதம் நடந்த தவெக கட்சி 2ம் ஆண்டு துவக்க விழாவிலும் பங்கேற்ற கட்சியினருக்கு சைவ விருந்துதான் பரிமாறப்பட்டது. அதுவும் இருக்கை வசதியின்றி டேபிளில் இலையில் பரிமாறப்பட்ட உணவை நின்றுகொண்டே கட்சியினர் சாப்பிட்டதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இன்று சென்னையில் நடக்கும் கட்சி பொதுக்குழு கூட்டத்திலும் மதிய உணவு சைவ விருந்தாக தான் உள்ளது. ஆனால் அதில் வெஜ் மட்டன் பிரியாணி சைவ மீன்குழம்பு என குறிப்பிட்டிருப்பது கட்சியினரை இன்னும் விரக்தியடைய செய்துள்ளது.





