தமிழ் சினிமாவில் பிசிறு இல்லாத நடிப்பில் சிறந்த நடிகர்களில் ஒருவராக முன்னிலையில் இருப்பவர் சியான் விக்ரம். நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தப்படியாக தனது கேரக்டருக்காக அதிகளவில் மெனக்கெடும் ஒரு ஒப்பற்ற கலைஞன். உடல் ரீதியான சிரமங்களை பொருட்படுத்தாமல் நடிப்புக்காக கடும் உழைப்பை தரும் சிறந்த கலைஞனாக இருக்கிறார்.
காசி சேது அந்நியன் ஐ பிதாமகன் என பல படங்களில் சியான் விக்ரம் நடிப்பு வேற லெவலில் இருந்திருக்கிறது. உடல் எடையை தன் கேரக்டருக்காக பாதியாக குறைப்பதும், அதே கேரக்டருக்காக தன் உடல் எடையை 2 மடங்காக அதிகரிக்கவும் செய்பவர் சியான் விக்ரம். காசி சேது ஐ படங்களில் இப்படி தன் உடலை வருத்தி நடித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த படம் தங்கலான். கடந்த ஆண்டில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் விமர்சன ரீதியாக விக்ரமின் நடிப்பு பெரிய வரவேற்பை பாராட்டை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
இந்நிலையில் சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் சித்தா படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் துஷாரா விஜயன் எஸ்ஜே சூர்யா நடித்த வீர தீர சூரன் படம் நேற்று முன்தினம் வெளியானது. டெல்லி ஐகோர்ட் தடை காரணமாக 27ம் தேதி மாலை தான் இந்த படம் திரைக்கு வந்தது. கலவையான விமர்சனங்களுடன் திரையில் ஓடுகிறது.
இதே நாளில் நடிகர் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் பிருத்விராஜ் இயக்கத்தில் உருவான எல்2 எம்புரான் படமும் வெளியானது. கடந்த 2019ம் ஆண்டில் வெளியான லூசிபர் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அதன் தொடர்ச்சியாக 2ம் பாகமாக தான் இந்த படம் திரைக்கு வந்து அபார வரவேற்பை பெற்றது. 2 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. மலையாள படவுலகில் 2 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த முதல் படம் இதுதான்.
எம்புரான் படத்துக்கு கடும் போட்டியாக சியான் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே இப்போது கிடைத்துள்ளது. வீர தீர சூரன் படம் முதல் நாளில் ரூ. 3.25 கோடி மட்டுமே வசூலித்தது. அதற்கு காரணம் முதல் நாள் அன்று மாலையில் தான் படம் ரிலீஸானது. 2ம் நாளில் இந்த படத்தின் வசூல் ரூ. 10 கோடியை மட்டுமே கடந்துள்ளது. எம்புரானுக்கு வசூலில் போட்டியாக வீர தீர சூரன் இல்லாமல் இப்படி தம்புரா வாசிப்பது போல இருக்கிறதே என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





