நடிகர் விக்ரம் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான படம் வீர தீர சூரன். கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான படம் தங்கலான். அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தங்கலான் படம் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. அதனால் வீர தீர சூரன் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.
சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவான படம் வீர தீர சூரன் என்பதால், நிச்சயமாக இந்த படம் அதிகளவில் ரசிகர்களை கவரும் விதமாக, அதுவும் விக்ரம் நடிப்பில் பெரிய பெரிய சம்பவங்களை கொண்ட படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
கடந்த 27ம் தேதி காலை வெளியாக வேண்டிய இந்த படம் சில பிரச்னைகளால் காலை மதியம் ரிலீஸ் ஆகாமல் மாலையில்தான் ரிலீஸ் ஆனது. எனினும் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் முதல் நாளில் படத்தின் வசூல் ரூ. 3.25 கோடியாகவும் 2வது நாளில் வசூல் ரூ. 10 கோடியை கடந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
வீர தீரன் படம் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மளிகை கடைக்காரர் கேரக்டரில் சியான் விக்ரம் நடித்திருக்கிறார். அவரது மனைவியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். மேலும் படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்திருக்கிறார். இந்த படத்தில் தூள் படத்தில் இடம்பெற்ற சிங்கம் போல பாடலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வீரதீர சூரன் படத்தை பொருத்த வரை இப்போது வெளியாகி இருப்பது 2ம் பாகம் என்பதும், இந்த படத்தின் இறுதியில் 3ம் பாகத்துக்கான லீடும் இடம்பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் அடுத்து வீர தீர சூரன் முதல் பாகமும் அதன்பிறகுதான் 3ம் பாகமும் இயக்கப்பட உள்ளதாக ஏற்கனவே டைரக்டர் அருண்குமார் கூறியிருக்கிறார். அதனால் இந்த படத்தின் 3 பாகங்களில் 2ம் பாகம் மட்டுமே இப்போது திரைக்கு வந்திருக்கிறது.
சமீபத்தில் வெளியான டிராகன் படம் ரூ. 150 கோடியை வசூலித்தது. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் 2ம் பாகம் எல்2 எம்புரான் படமும் 2 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. ஆனால் வீர தீர சூரன் படம் 4 நாட்களில் மொத்தம் ரூ. 27 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. இது சராசரியான வசூல்தான் என்றும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களின் லிஸ்ட்டில் இந்த படம் இடம்பிடிப்பது சந்தேகம்தான்.





