நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் நாயகன். கடந்த 1987ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். நடிகர் கமல்ஹாசன் வேலு நாயக்கர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த கமலுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது.
நாயகன் படத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் நாயகியாக அறிமுகமாகி இருந்தார். நடிகர்கள் நாசர் ஜனகராஜ் டெல்லி கணேஷ் நிழல்கள் ரவி உள்ளிட்டோருக்கும் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. படத்துக்கு எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதியிருந்தார். இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கிறது.
ஆனால் நாயகன் படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் கமல்ஹாசன் இணையவில்லை. 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர்கள் இணைந்த படம்தான் தக்லைஃப். இந்த படத்தில் கமலுடன் சிலம்பரசன் அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ மற்றும் அபிராமி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
தக்லைஃப் படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஜிங்குச்சா வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது மணிரத்னம் கமல்ஹாசன் சிம்பு அபிராமி திரிஷா அசோக் செல்வன் ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் மணிரத்னத்தை அஞ்சரை மணிரத்னம் என்றும் நடிகர் கமல் கலாய்த்தார்.
இந்நிலையில் தக்லைஃப் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வருகிற ஜூன் 5ம் தேதி தக்லைஃப் படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை மிக சிறப்பாக நடத்த நடிகர் கமல்ஹாசனும் இயக்குனர் மணிரத்னமும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி வருகிற மே 16ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் தக்லைஃப் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கடந்த 18ம் தேதி இதே நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீடு மிக பிரமாண்டமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.





