இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் தக்லைஃப். இந்த படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். மேலும் படத்தில் சிலம்பரசன் திரிஷா அசோக் செல்வன் அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து ஜிங்குச்சா என்ற பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் சிலம்பரசன். குறிப்பாக சிம்பு மீது இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் குறிப்பாக ஷூட்டிங்குக்கு சரியாக வரமாட்டார். அப்படியே வந்தாலும் காலதாமதமாக தான் வருவார் என்றும் பல முறை கூறப்பட்டிருக்கிறது.
இப்போது தக்லைஃப் படத்தின் பிரமோசன் பணியில் நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அப்போது அவரிடம், ஏன் நீங்கள் படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறீர்கள்? ஆனால் மணிரத்னம் இயக்கும் படம் என்றால் மட்டும் சரியான நேரத்துக்கு வருகிறீர்களே என்றும் கேள்வி கேட்கப்பட்டது.
இதுகுறித்து பதிலளித்த நடிகர் சிலம்பரசன் கூறுகையில், நான் நடித்த சில படங்களை இயக்கிய இயக்குனர்களே படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக தான் வந்தனர். அதனால் இயக்குனர் வருவதற்கு முன்பே நான் எதற்கு வந்து காத்திருக்க வேண்டும் என்று திருப்பி கேள்வி எழுப்பினார்.
மேலும் பெரும்பாலான இயக்குனர்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பிறகுதான் அன்று எடுக்க வேண்டிய காட்சி குறித்தே விவாதித்து முடிவு செய்கின்றனர். அதற்கு நீண்ட நேரம் ஆவதால் நான் மெதுவாக வருகிறேன். தவிர, மானிட்டரில் நடிப்பை பார்த்து விட்டு என்னிடம் மைக்கில் கத்தி கரெக்சன் கூறுகிறார்கள் என்றும் சிலம்பரசன் அந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
மேலும் இயக்குனர் மணிரத்னம், காலை 5 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். எந்த காட்சியை எடுக்க வேண்டுமோ அந்த காட்சியை வந்தவுடன் எடுக்க ஆரம்பித்து விடுவார். மானிட்டரில் பார்த்து மைக்கில் கத்தாமல் எதை சொல்வதாக இருந்தாலும் அருகில் வந்து திருத்தம் சொல்லி நடிக்க சொல்வார். அதனால்தான் மணிரத்னம் படத்துக்கு சரியான நேரத்துக்கு வந்துவிடுகிறேன் என்று நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார்.





