தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனரான மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர்தான் சுதா கொங்கரா. வெள்ளித்திரையில் இயக்குனராக ஆசைப்பட்ட அவர் முதல்முறையாக துரோகி எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் இதில் கதாநாயகன்களாக நடித்திருந்தனர்.
ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதன்பிறகு தனது இயக்கத்திற்கு சிறிது காலம் ஓய்வு எடுத்திருந்த சுதா, இறுதிச்சுற்று எனும் மாபெரும் அசத்தல் திரைப்படத்தை எடுத்து தான் யார் என்பதை நிரூபித்தார். குத்துச்சண்டையையும் காதலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.
அதுமட்டுமல்லாமல் சுதா கொங்கரா யார் என்பதும் திரை உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. இங்கிருந்து சூர்யாவுடன் கைகோர்த்த அவர் சூரரைப் போற்று திரைப்படத்தை கொடுத்தார். இந்த திரைப்படத்தில் ஒரே ஒரு குறை என்னவென்றால் அது திரையரங்குகளில் நேரடியாக வெளியாகாமல் இருந்தது தான்.
ஓ டி டி யில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்லாமல் தேசிய விருதையும் வென்றது. நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இல்லை வாழ்ந்திருந்த சூர்யா தேசிய விருதைப் பெற்றார். இப்படி சூரரைப் போற்று திரைப்படம் சூர்யாவுக்கும் சுதாவுக்கும் மிக முக்கிய காவியமாக அமைந்தது.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்திருக்கும் சுதா, பராசக்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் வில்லனாக நடிக்கிறார் ரவி மோகன். அதர்வா, ஸ்ரீலிலா உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு தற்சமயத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளிலும் சுதா கொங்கரா ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நரன் எழுதியிருந்த வேட்டை நாய்கள் என்னும் தொடரைதான் சுதா இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியை கதைக்களமாக கொண்டு இந்தத் தொடர் எழுதப்பட்டிருந்தது. இதன் உரிமையை பெற்று இருக்கும் சுதா, சிம்புவை வைத்து இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





