இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் நாளை மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரிலீஸ் ஆகிறது. உலகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரெட்ரோ படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடிகர் சூர்யா பங்கேற்று வருகிறார். தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் அவர் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஹைதராபாத்தில் ரெட்ரோ படத்தின் தெலுங்கு வெர்ஷன் பிரமோஷன் நடந்தது. அதில் நடிகர் சூர்யா கலந்துக்கொண்டார்.
சமீப காலமாக பிற மொழி படங்களில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பிரபல நடிகர்களும் பங்கேற்று பிறமொழியாக இருந்தாலும் நடிப்பில் சக நடிகராக உள்ள முக்கிய ஹீரோக்களின் பட பிரமோஷனில் பங்கேற்று பாராட்டி அந்த படங்களுக்கு பிரமோ செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ரெட்ரோ படத்தின் விழாவில் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம், பழைய காலத்துக்கு செல்ல வேண்டும் என்றால் யாரை சந்திப்பீர்கள் என்ன செய்வீர்கள் என்று அந்த விழாவில் தொகுப்பாளனி ஒரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியதாவது, நான் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சாவா என்ற படத்தை பார்த்தேன்.
அதில் அவுரங்கசீப்பின் செயல்பாடுகளை பார்த்தபோது கோபமாக வந்தது. எனக்கு மட்டும் கால எந்திரத்தில் பின்னோக்கி செல்லும் வாய்ப்பு கிடைத்தால், ஆங்கிலேயர் காலத்துக்கு சென்று பிரிட்டிஷ்காரர்களுக்கு இரண்டு அறை கொடுக்க வேண்டும். அது மட்டும் இல்லை, அவுரங்கசீப்புக்கும் அதேபோல் இரண்டு அறை கன்னத்தில் ஓங்கி கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு எனக்கு கோபம் இருக்கிறது.
எனக்கு வரலாற்றுக் காலத்திற்கு பின்னாடி போக வாய்ப்பு கிடைத்தால் என்னிடம் இது போன்ற அறை வாங்குவதற்கான ஆட்களின் பெயர்கள் நிறையவே இருக்கிறது என்று பரபரப்பாக பேசினார். ஒரு சிலர் மத்தியில் இது சிரிப்பை வரவழைத்தாலும், சாவா படம் பார்த்த விஜய் தேவரகொண்டாவுக்கு அவுரங்கசீப் மீது இத்தனை கோபம் வந்திருக்கிறதே என்ற ஆச்சரியத்தையும் அவரது ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.





