வேட்டையன் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் இப்போது போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி கூலி படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
ஏற்கனவே மாநகரம் கைதி விக்ரம் மாஸ்டர் லியோ ஆகிய மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் மிக தீவிரமான ரசிகர். அதனால் அவரது இயக்கத்தில் உருவான கூலி படத்தில் ரஜினிகாந்தை வைத்து பெரிய அளவில் தரமான சம்பவம் செய்திருப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் ரூ. 1000 கோடி வசூலை தொடவில்லை. தெலுங்கு கன்னடம் இந்தி படங்கள் சில தொடர்ந்து ரூ. 1000 கோடி வசூலை வெகுவாக கடந்து வருகின்றன. கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸான ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஹீரோவின் படமும் அந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. கடந்தாண்டில் வெளியான படங்களில் 8 படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி வசூலை கடந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி படம் ரூ. 1000 கோடி வசூல் சாதனையை எட்டுமா என ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் அதற்கும் சிக்கல் வந்துவிட்டது.
தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் இந்தியில் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடித்த வார் 2 படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அதே நாளில்தான் ரஜினிகாந்த் நடித்த கூலி படமும் வெளியாகிறது. தமிழ்நாட்டை பொருத்த வரை ரஜினி படத்துக்குதான் அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்.
ஆனால் ஆந்திரா தெலங்கானா மாநிலங்களிலும் மும்பை உள்ளிட்ட இந்தி பேசும் வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களை வார் 2 படம் அள்ளி விடும். இதனால் தெலுங்கு இந்தி பேசும் மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு கூலி படத்துக்கு தியேட்டர்கள் எண்ணிக்கை கிடைக்காது. இதனால் ஓபனிங் ஷோ முதல் ஒரு வாரம் வரைக்கும் ரஜினி நடித்த கூலி படத்துக்கு வார் 2 படம் பெரிய அளவில் வசூலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.





