இயக்குனர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. இவர் ஆரம்ப காலத்தில் படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இப்படியான சூழலில்தான் சென்னை 600028 திரைப்படம் அவரை இயக்குனராக அடையாளப்படுத்தியது. கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிக்ஸர் அடித்தார் வெங்கட் பிரபு.
இதன்பிறகு பலரது பார்வையும் இயக்குனர் பக்கம் திரும்பியது. அதனை மிக சக்சஸ் புல் ஆகவும் அவர் எடுத்துச் சென்றார். குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா திரைப்படத்தை நாம் கூறியே ஆக வேண்டும். அஜித்தின் 50 ஆவது திரைப்படமாக இது எடுக்கப்பட்டது.
யுவன் சங்கர் ராஜா இசையில் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த திரைப்படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஏற்று இருந்த அஜித், அதில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில், அஜித்தின் மாஸான லுக்கில் திரையரங்குகள் அதிர்ந்தன.
இப்படியான சூழலில் அந்த திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இது பற்றி பேசி இருக்கும் அவர், மங்காத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் சார் எப்போதுமே கூலாகத்தான் இருப்பார். அதுமட்டுமல்ல படத்திற்கான காட்சியிலும் சில யோசனைகளை அவர் கூறுவார்.
அவர்களுக்கு அதை எப்படி மாஸாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தெரியும். மச்சி ஓப்பன் தி பாட்டில் பாடலுக்கு முன்பாக மிகவும் பதற்றத்துடன் அனைவரும் பேசுவது போன்ற காட்சி வைத்திருந்தேன். அதில் அஜித் சாருக்கும் டயலாக் இருந்தது. ஆனால் இது வேண்டாம், பசங்களே பேசட்டும் என்று கூறினார். அது சரியாக ஒர்க் அவுட் ஆனது.
ஒரு காட்சியில் வைபவ் கடத்தப்படும் போது, அஜித் சார் உள்ளே சென்று காப்பாற்றுவது போன்று காட்சி வைத்திருந்தேன். ஆனால் இது என்னை விட அஸ்வின் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அதன் பிறகுதான் திரிஷாவின் தந்தை கேரக்டரிடம் அஜித் சார் துப்பாக்கி வைப்பது போன்ற காட்சி இருக்கும். இப்படி படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு யோசனைகளை அவர் வழங்கியிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.





