தனுஷிற்கு கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை அவர் இயக்கி நடித்திருந்தார். தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை தனுஷ் இயக்கினார். ஆனால் இது ரசிகர்கள் மத்தியில் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை. இப்படியான சூழலில் தற்போது மீண்டும் இட்லி கடை என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இதில் அருண் விஜய் வில்லனாக நடித்திருப்பதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நித்யா மேனன் ராஜ்கிரண் பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் படத்தில் இருக்கிறார்கள். அக்டோபர் ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனுஷ் பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் எல் ராய் இதனை இயக்கியுள்ளார். இதில் சங்கர் என்னும் விமானப்படை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அது தொடர்பான புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகின. இதுபோக அவர் குபேரா திரைப்படத்திலும் நடித்து முடித்து விட்டார்.
வரும் இருபதாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் சேகர் கமுலா இதனை எடுத்து உள்ளார். படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாகர்ஜூனா. நேரடி தெலுங்கு திரைப்படமாக இது எடுக்கப்பட்டு இருப்பதும், நாகர்ஜுனா படத்தில் நடித்திருப்பதும் அதன் மீதான எதிர்பார்ப்பை சற்று கூட்டி இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் ராஷ்மிகா மந்தனாவும் படத்தில் இருக்கிறார். தனுஷ் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து முன்னோட்டம் வெளியானது. பணத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதும், தனுஷ் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதும் அதன் முன்னோட்டத்தை பார்க்கும் போதே தெரிந்தது.
இந்த நிலையில் தணிக்கை சான்றிதழில் இந்த திரைப்படம், மூன்று மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் நல்ல திரைப்படமாக இருந்தாலும் இவ்வளவு நீளமாகவா எடுத்து வைப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் கடைசி நேர பதட்டத்தை தவிர்ப்பதற்காகவே இறுதி பிரதியை அப்படியே தணிக்கை குழுவுக்கு அனுப்பியதாகவும், படம் இரண்டு மணி நேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்படும் என்றும் அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனை இரண்டரை மணி நேரமாக குறைத்தால் எதுவுமே இருக்காது என்றும், 150 நிமிடங்களில் இந்த திரைப்படத்தின் கதையை சொல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.





