- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் இப்போது நாம் இருவரும் சேர முடியுமா? - இசைஞானி இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து எழுதிய...

மீண்டும் இப்போது நாம் இருவரும் சேர முடியுமா? – இசைஞானி இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து எழுதிய கடிதம்!

- Advertisement -

இசைஞானி இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு கடிதம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வைரமுத்து வரிகளில் எழுதியிருப்பதாவது, இசைஞானியே என்னோடு சேர்ந்துதான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை; உன்னோடு சேர்ந்துதான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை. என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தை தொடங்கி வைத்தவனே, தூக்கி நிறுத்தியவனே, உன்னை நினைக்கும் நினைக்கும் போதெல்லாம் என் மனசில் ஈரமான பக்கங்கள் படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு பேரிச்சம் பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையை போல, என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன். மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையை தலைக்கு வைத்து படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

- Advertisement -

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான். மனசில் மிச்சம் இல்லாமல் பேசி சிரித்ததும் உன்னோடுதான். பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான். நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான். ஆனால் நான் கண்ணிலும் மெல்லியவன்.நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது. பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து தூசு தட்டி வாசிப்பது போல், உன் தூசுகளை துடைத்துவிட்டு உன்னை நான் ஹார்மோனியமாகவே நேசிக்கிறேன்.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்? ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பி சுள்ளென்று அடிக்க வைத்தாய். இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய். என் பெயரை காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய். நீதான் அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய். ஒரு கணம் திகைத்தேன். வெள்ளை தாமரையாய் இருந்த என் மனசு கார்பன் தாளாய் கறுத்தது.

- Advertisement -

என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை. நீ வீழ்ந்தாலும் வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதம் இல்லை. இவ்வளவு உயரத்தில் ஏறி இருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது. நீயும் நானும் சேர வேண்டுமாம். சில தூய இதயங்கள் சொல்லுகின்றன. உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஈரமான ரோஜாவே எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென நீ என்னை துரத்தினாய். நான் ஓடினேன். நீ துரத்திக் கொண்டே இருந்தாய். நான் ஓடிக்கொண்டே இருந்தேன்.

மழை வந்தது, நின்று விட்டேன். என்னை நீ பிடித்து விட்டாய். அப்போது சேர்ந்து விட்டோம். ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம். இப்போது முடியுமா? இருவரும் வேறு திசையில் அல்லவா ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று வைரமுத்து அந்த பதிவில் கூறியிருக்கிறார். இளையராஜா, வைரமுத்து பிரிந்த அந்த காலகட்டத்தில் வைரமுத்து இளையராஜாவுக்காக எழுதிய இந்த கடிதம் 36 ஆண்டுகளுக்கு பின் இப்போது இணைணயத்தில் வைரலாகி விட்டது.

- Advertisement -

சற்று முன்