அட்லி கடைசியாக ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதற்கு முன்னதாக விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருந்த அவர், பாலிவுட் பக்கம் சென்று முதல் திரைப்படத்திலேயே ஷாருக்கானை வைத்து இயக்கும் அளவுக்கு உயர்ந்தார். நயன்தாரா விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படம், அங்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தமிழ் சினிமாவுக்கு ஜவான் திரைப்படம் பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் அது இந்தி சினிமாவுக்கு மிகவும் புதுமையாகவும் கமர்சியல் ரீதியாக விறுவிறுப்பாகவும் இருந்ததால் படத்திற்கு பலரும் பச்சைக்கொடி காட்டினர். இதன் காரணமாக அந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
அதுவும் தமிழ் சினிமாவில் இருந்து சென்ற ஒரு இயக்குனர் அங்கு ஆயிரம் கோடி ரூபாய் வசூலுக்கு காரணமாக இருந்ததை பலரும் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து அட்லி அல்லு அர்ஜுனிடம் கதை கூறியதாகவும் ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை என்றும் தகவல் வெளியாகின. பிறகு அட்லி, சல்மான் கானுடன் இணைய இருப்பதாகவும் பேசப்பட்டது.
அந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் கேமியோ ரோலில் வருவதாகவும் கூறினார்கள். ஆனால் கடைசி நேரத்தில் இந்த திட்டம் நின்று போக மீண்டும் அல்லு அர்ஜுனை சந்தித்து புதிய கதை ஒன்றை அட்லி கூறி இருக்கிறார். இது ஓகே ஆக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
படத்தில் அல்லு அர்ஜுன் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டிலும் இது உருவாகிறது. இதற்கான அறிவிப்பு வீடியோவே பலரும் கவனிக்கும் வகையில் அமைந்தது. அறிவியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு அட்லி தயாராகி வருகிறார். கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.
இது மட்டுமல்லாமல் ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாகூர் உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்களாம். மும்பையில் இதன் முதல் கட்ட சூட்டிங் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழில் வெளியான வேள்பாரி நாவலை மையமாக வைத்துதான் இந்த திரைப்படத்தின் கதையை அட்லி உருவாக்கி இருப்பதாக புதிய தகவல் கசிந்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.





