கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை நடிகர் ரிஷப் ஷெட்டி டைரக்ட் செய்து அவரே நாயகனாகவும் நடித்திருந்தார். முதலில் கன்னட மொழியில் உருவான இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மூவியாக ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பிற மொழிகளிலும் காந்தாரா படம் டப்பிங் செய்து வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பக்தி பரவசமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டியை நடிகர் ரஜினிகாந்த், தன் வீட்டுக்கு நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
காந்தாரா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது காந்தாரா படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த படம் காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் அதற்கு முன்பு 800ம் ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது. அதாவது காந்தாரா 2 படம், காந்தாரா படத்தின் முந்தைய காலகட்டத்தில் நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங்கை துவங்கியது முதல் பல்வேறு சிக்கல்களை சிரமங்களை படக்குழுவினர் சந்தித்து வருகின்றனர். முதலில் இந்த படத்தில் நடித்த கபில் என்ற நடிகர் சூட்டிங் இடைவேளையின் போது கர்நாடகாவில் உள்ள சௌபர்ணிகா நதியில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தார். இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்தது.
அதன்பின்பு காந்தாரா 2 படத்தில் நடித்து வந்த ராகேஷ் பூஜாரி என்ற நடிகரும் மாரடைப்பால் திடீரென இறந்தார். மேலும் இந்த படத்தில் நடித்த விஷூ விகே என்ற நடிகரும் சமீபத்தில் ஹோட்டல் அறை ஒன்றில் இறந்து கிடந்தார். இப்படி தொடர்ந்து இந்த படத்தின் துயர சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் 30 பேர் பயணித்த படகு தற்போது விபத்தில் சிக்கியது பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.
ஷிவமோகா என்ற பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட 30 பேர் படகில் பயணித்துள்ளனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்து அனைவரும் நீர்த்தேக்கத்தில் விழுந்தனர். நீரில் மூழ்கிய படக்குழுவினர் நீந்தியே கரைக்கு சேர்ந்து உயிர் பிழைத்திருக்கின்றனர். இப்படி தொடர்ந்து காந்தாரா 2 படப்பிடிப்பில் தகாத சம்பவங்கள் நடந்து வருவது படக்குழுவினரை பலத்த அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. மேலும் ரசிகர்களுக்கும் பலத்த கவலையை தந்துள்ளது.





