தமிழ் சினிமாவில் மசாலா திரைப்படங்களை இயக்குவதில் வல்லவராக மாறிவிட்டார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படம், கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ஆபாசமான முறையில் அந்த திரைப்படத்தின் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது இதற்கு காரணமாக அமைந்தது.
இருப்பினும் படம் பரபரப்பாக பேசப்பட்டதால் வசூல் ரீதியாக லாபத்தையே கொடுத்தது. இதன் பிறகு சிலம்பரசனை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்னும் திரைப்படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வியை சந்தித்தது.
இதன்பிறகு, அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்த ஆதிக் ரவிச்சந்திரன், அந்த சமயத்தில் அஜித்திடம் ஒரு கதையை கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் நடுவே, பிரபுதேவாவை வைத்து பகிரா என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் ஆதிக். அதுவும் படுதோல்வியை சந்திக்க விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார்.
டைம் மெஷின் கான்செப்ட்டை மையமாக வைத்து, திரைக்கதையில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் நல்ல ஒரு மசாலா திரைப்படமாக அதனை ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்திருந்ததால், மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி பெற்றது. அதில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் பாராட்டைப் பெற்றது. 100 கோடி ரூபாய் வசூல் குவித்து சாதனையும் படைத்தது.
தொடர்ந்து அஜித்குமாரை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இது கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் பட்டையை கிளப்பியதால், தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற இயக்குனராக உயர்ந்தார் ஆதிக். அடுத்ததாகவும் இவர் அஜித் குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், இதன் பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் லவ் மேரேஜ் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சியில், ஆதிக் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், விக்ரம் பிரபு பரிசோதனை முயற்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் வில்லனாகவும் நடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசி இருக்கிறார். விக்ரம் பிரபுவின் சகோதரியைதான் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.





