தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன். ரத்தமும் சதையுமாக ஒரு கதையை அழுத்தத்துடன் பதிவு செய்யும் இயக்குனருக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன், ஆடுகளம், விசாரணை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி அடுத்த அடுத்த கட்டங்களுக்கு முன்னேறினார்.
அவர் தனுஷை வைத்தே நான்கு திரைப்படங்களை இயக்கி விட்டார். அசுரன், வடசென்னை, ஆடுகளம், பொல்லாதவன் என நான்கு திரைப்படங்களும் ஹிட் அடித்து விட்டன. இதுபோக விசாரணை திரைப்படமும் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. விடுதலை படத்தின் ஒன்றாம் மற்றும் இரண்டாம் பாகங்களையும் வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார்.
இயக்கம் மட்டுமல்லாது தயாரிப்பிலும் வெற்றிமாறன் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக கிராஸ் ரூட் கம்பெனி என்னும் நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். இதன் கீழ் முதல் திரைப்படம் ஆக உதயம் nh4 திரைப்படத்தை அவர் தயாரித்திருந்தார். சித்தார்த் கதாநாயகனாக நடித்த அந்த திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றது.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் அவ்வபோது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காக்கா முட்டை விசாரணை உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றார் வெற்றிமாறன். பேட்ட காளி வெப் சீரிஸும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவானதுதான். அண்மையில் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தையும் வெற்றிமாறனே தயாரித்து இருந்தார்.
இப்படியான சூழலில் தற்போது கவினை வைத்து மாஸ்க் என்னும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார் வெற்றிமாறன். கவினை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கிறார். லிஃப்ட் மற்றும் டாடா என இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த அவருக்கு கடைசியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்கள் அந்த அளவுக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. ஸ்டார் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தோல்வியடைந்தன.
இதனால் அடுத்து வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் கவின் இருக்கிறார். இப்படியான சூழலில் அவர் நடித்துவரும் மாஸ்க் திரைப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் ஆண்ட்ரியா. விகர்ணன் அசோக் என்பவர்தான் இதனை இயக்கியுள்ளார். இந்த நிலையில் எடுக்கப்பட்ட காட்சிகள் வரை தயாரிப்பாளர் வெற்றிமாறன் பார்த்ததாகவும் இதில் அவருக்கு சில காட்சிகள் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இப்படியான சூழலில் மாஸ்க் படத்தில் சில போர்சன்களை இயக்க வெற்றி மாறனே முடிவு எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





