கடந்த 2002ம் ஆண்டில் இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ஜூட் பார்த்திபன் கனவு கனா கண்டேன் போஸ் மெர்க்குரி பூக்கள் உயிர் நண்பன் சதுரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். வெப் சீரிஸ் ஒன்றிலும் சமீபத்தில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுபான விடுதி ஒன்றில் கடந்த மாதம் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகி மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு அதிமுக ஐடி விங்கின் நிர்வாகியான பிரசாத் மீது, அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என அடுத்தடுத்து போலீஸில் புகார்கள் குவிந்தன.
இதுகுறித்து நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் பிரசாத் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவரிடம் யார் போதை பொருள் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொகைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பிரதீப் மூலமாக நடிகர் ஸ்ரீகாந்துக்கு பிரசாத் போதைப்பொருள் வழங்கியதாக வாக்குமூலம் தந்தார். நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
ஒரு கிராம் கொகைன் போதை பொருளை 12000 ரூபாய் கொடுத்து ஸ்ரீகாந்த் வாங்கியதாக கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் நடிக்கும் தீக்கீரை என்னும் படத்தை மூன்று தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் பிரசாத். அந்த படம் தொடர்பான பார்ட்டியில் பிரசாத், ஸ்ரீகாந்துக்கு கொகைன் வழங்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போதை பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





