கடந்த ஆண்டு விஜய் சேதுபதிக்கு வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குரங்கு பொம்மை படத்தை எடுத்த நித்திலன் சுவாமிநாதன் இதனை இயக்கியிருந்தார். சாதாரண பழி வாங்கும் கதையை மிகவும் விறுவிறுப்புடன் கூறி இருந்ததால் ரசிகர்கள் மகாராஜாவுக்கு மிகுந்த வரவேற்பு கொடுத்தனர்.
மகாராஜா வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ஆறுமுககுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஏஸ் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மலேசிய நாட்டை கதைக்களமாகக் கொண்டு இது எடுக்கப்பட்டது. படத்தில் நகைச்சுவை எடுபட்டதால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதேசமயம் படத்திற்கு எந்த ஒரு பிரமோஷனும் செய்யப்படவில்லை. இதனால் பாதி பேருக்கு இந்த திரைப்படம் வந்தது கூட தெரியாது என்று கூறலாம். இதன் காரணமாக ஏஸ் திரைப்படம் வசூலில் எந்த ஒரு சாதனையும் படைக்கவில்லை. இது ஒரு பக்கம் இருக்க மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ட்ரெயின் திரைப்படமும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கும் இந்த திரைப்படம், சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதே போல், மிஷ்கினின் பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இதுபோக பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இதற்கு தலைவன் தலைவி என பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். திருச்சி சுற்றுவட்டாரத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய் சேதுபதி ஹோட்டல் நடத்தும் நபராக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் தலைவன் தலைவி திரைப்படம் அடுத்த மாதம் 25ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விஜய் சேதுபதி ராகவர்த்தினி எனும் ஓட்டலை நடத்தி வருவது போன்று வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. விஜய் சேதுபதி ஆகாச வீரன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நித்யாமேனனுக்கு பேரரசி என்னும் ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நிமிடம் ஓடும் இந்த வீடியோவிற்கு பலரும் இணையத்தில் லைக் தெரிவித்து வருகின்றனர்.





