தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன் படம் மூலம் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானவர் கௌதமி. தமிழில் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பாக பணக்காரன் ராஜா சின்ன ரோஜா அபூர்வ சகோதரர்கள் பெண்புத்தி பின்புத்தி ரிக்ஷா மாமா ருத்ரா தேவர்மகன் சந்தனக்காற்று என பல படங்களில் கௌதமி நடித்திருக்கிறார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பிறமொழிகளிலும் நிறைய படங்களில் கௌதமி நடித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனுடன் 17 ஆண்டுகள் லிவிங் டூ ரிலேசன்ஷிப் குடும்பம் நடத்திய கௌதமி, பிறகு அவரை விட்டு விலகினார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார்.
நடிகை கௌதமி கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் எனது மகளின் எதிர்காலத்திற்காக அனைத்து சொத்துக்களையும் விற்பனை செய்ய அழகப்பன் என்பவரை நான் பவர் ஏஜெண்டாக நியமித்தேன். ஆனால் அவர் எனது பல சொத்துக்களை விற்று 11 கோடி ரூபாய் வரை என்னை அவர் ஏமாற்றி விட்டார்.
எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் புகார் மனுவில் கௌதமி கூறியது அனைத்தும் உண்மை என்று கண்டுபிடித்தனர். அழகப்பன் அவரது மனைவி நாச்சல் அழகப்பன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த பலராமன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்து இருந்தது உறுதியானதால் மத்திய குற்றப்பிரிவிலிருந்து அமலாக்கத்துறை சட்டவிராத பணி மாற்றம் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அதன்படி நடிகை கௌதமிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கௌதமி நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அழகப்பனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, உங்கள் சொத்துக்களை கவனிக்க அழகப்பனை ஏன் பவர் ஏஜண்டாக நியமித்தீர்கள், சொத்துக்களை வாங்க பணம் எங்கிருந்து வந்தது என 50க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு கௌதமி அளித்த பதிலை அமலாக்கத்துறை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டது. 7 மணி நேரம் நீடித்த விசாரணை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. பிரபல சீனியர் நடிகையிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய 7 மணி நேரம் விசாரணை கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





