தமிழ் சினிமாவில் கேப்டன் விஜயகாந்த் என்றாலே அவரது துணிச்சலும் வீரமும்தான் முதலில் பேசப்படும். அந்தளவுக்கு மிகவும் தைரியமான ஒரு மனிதர். மதுரை மண்ணுக்கே உரிய வீரமான குணம் அவரிடம் நிறைந்து இருந்தது. அதே அளவுக்கு மனிதநேயமும் பண்பாடும் மிக்க ஒரு சிறந்த கலைஞராகவும் அவர் இருந்தார்.
அவரது படங்களில் பெரும்பாலும் அநியாயம் எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கும் ஒரு நல்ல ஹீரோவாக நடித்திருந்தார். அவரது நிஜ முகமும் அதுதான். எந்த இடத்தில் யார் பிரச்னை செய்தாலும் தயங்காமல் மோதிவிடும் கோபம் அவரிடம் இருந்துள்ளது. அதை நேரில் பார்த்த சக நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பலரும் உண்டு.
அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். இயக்குனர் கே பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சமுத்திரக்கனி. அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்திலும் உதவி இயக்குனராக இருந்தார். அவர் இயக்கிய முதல் படம் நெறஞ்ச மனசு. கேப்டன் விஜயகாந்த் ஹீரோவாக அதில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாவது, நெறஞ்ச மனசு படத்தின் சூட்டிங் உளுந்தூர்பேட்டையில் நடந்தது. நான் விஜயகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுத்துட்டு இருக்கேன். அன்னிக்கு சரியான கூட்டம். அந்த கூட்டத்தில் வயதான பாட்டி விஜயகாந்த் பார்க்கறதுக்கு ஆர்வமாக வந்துட்டாங்க.
ஆனா யாரும் அந்த பாட்டியை உள்ளே விடவில்லை. இதை தூரத்தில் இருந்து பார்த்த விஜயகாந்த், டேய் பாட்டியை இங்க விட்றான்னு சத்தமா சொன்னார். பாட்டி வந்ததும் கட்டிப்பிடித்து அன்பாக நலம் விசாரிச்சார். அப்போ அந்த பாட்டி, ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் குறைச்சு ஊத்தறான் அரிசியை குறைச்சு போடறான். நீ வந்து அவனை அடின்னு சொல்லி கூப்பிட்டாங்க.
நாங்க அப்படியே ஷாக் ஆயிட்டோம். அதுக்கு கேப்டன், அப்படி எல்லாம் அடிக்க முடியாது ஆத்தா. நீங்க ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வைங்க. அதுக்கப்புறம் எவனும் எந்த ஊழலும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு, இந்த ஆத்தாவை சாப்பிட வைத்து அனுப்புங்கன்னு சொன்னார். அப்புறம் பாட்டி போகும் போது அரிசி கொடுத்து அனுப்பி வைத்தார். அதுதான் கேப்டன் குணம் என்று இயக்குனர் சமுத்திரக்கனி அதில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





