தமிழ் சினிமாவில் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் கூலி, முதல் இடத்தில் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கிறார்கள். தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் ரஜினிகாந்த்துக்கு தேவா எனும் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படத்தின் சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே இது தனது முந்தைய திரைப்படங்களைப் போல இருக்காது என்று உறுதி அளித்து இருந்தார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக போதைப் பொருட்கள் தொடர்புடைய காட்சிகள் இருக்காது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இதே போல் கூலி திரைப்படம் எல் சி யு வுக்குள் இல்லை என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இப்படியான சூழலில் படத்தின் சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது போஸ்ட் ப்ரடக்சன் பணிகளும் நிகழ்ந்து வருகின்றன. இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க விசாகப்பட்டினத்தில் எடுத்திருக்கிறார்கள்.
துறைமுகத்தை மையப்படுத்தியே பெரும்பாலான காட்சிகள் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பான் இந்தியா திரைப்படம் என்பதால் பிற மாநில ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்க்கும் வகையில், அந்தந்த மாநிலங்களில் இருந்து முக்கிய நட்சத்திரங்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். குறிப்பாக பாலிவுட்டில் இருந்து அமீர்கான் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் மகளான ஸ்ருதிஹாசன் இடம் பெற்றுள்ளார். அவருக்கு ப்ரீத்தி என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் கமல்ஹாசன் மகன் நடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில்,
எனது தந்தையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய தூண்கள். படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் பற்றி அறிந்து கொள்வதற்கு சுவாரசியமாக இருந்தது. அவர் தனித்துவமான குணாதிசயங்களை ஒருங்கே பெற்றிருப்பவர். நீங்கள் ரொம்ப கூல் என்று அவரிடம் நான் கூறியிருக்கிறேன். அவரை சுற்றி பணியாற்றுவதில் பலரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.





