அமரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் இதில் எதுவும் விரைவாக முடிந்த பாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏ ஆர் முருகதாஸ் உடன் அவர் இணைந்து பணியாற்றிய மதராசி திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முருகதாஸோ பாலிவுட்டிற்கு சென்று சிக்கந்தர் திரைப்படத்தையும் எடுத்துவிட்டார்.
அது அங்கு படுதோல்வியை சந்தித்தது. முருகதாஸ் பாலிவுட் பக்கம் சென்று இருந்த சமயத்தில், சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா உடன் கைகோர்த்து பராசக்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. முதல்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ரவி மோகனும் ஒப்புக்கொண்டார்.
அதர்வா ஸ்ரீ லீலா உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள். ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்து வந்தார். சென்னை காரைக்குடி சிதம்பரம் மற்றும் இலங்கை பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பு தரப்பில் இருந்து ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் மதராசி திரைப்படத்திற்கு வந்த சிவகார்த்திகேயன் அதன் சூட்டிங்கை முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் குட் நைட் பட இயக்குனர் இயக்கத்தில் தான் நடிப்பதாக இருந்தது. தற்போது அந்தத் திட்டம் மாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியுடன் சிவகார்த்திகேயன் கைகோர்க்க இருப்பதாகவும், தற்போது அதற்கான பணிகள் தொடங்கி இருப்பதாகவும் பேசுகிறார்கள்.
இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்து வெற்றி பெற்ற மாவீரன் திரைப்படம், சர்வதேச அளவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்டேலா திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம், வெற்றி பெற்றது.
கோழையாக இருக்கும் ஒரு இளைஞன் எப்படி வீரனாக மாறுகிறான் என்ற ஒன்லைனை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், சமூக கருத்துக்களும் அந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தன. இப்படியான சூழலில் இந்த திரைப்படம் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த தகவலால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.





