ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக ஊடகங்களில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில், “ஜெயிலர்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய காகா கதை விஜய் ரசிகர்களை உசுப்பிவிட்டது. அதே போல் இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை ரஜினிக்குத்தான் சாதகமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இந்த சர்ச்சையால் “ஜெயிலர்” திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் இத்திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவிலேயே பல கோடி ரூபாய் வசூல் வந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் நிருபர், “1990களில் இருந்தே ரஜினிகாந்த் தனது திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக்கொண்டே இருப்பார். ஆனால் அரசியலுக்கு வரமாட்டார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முழுவதுமாக அரசியலுக்கு வரப்போவதில்லை எனவும் கூறிவிட்டார். இப்போது ரஜினி விஜய்யை பற்றி பேசி ஜெயிலர் படத்திற்காக புரொமோஷன் செய்துகொள்கிறார் என்று கூறுகிறார்களே. இதை குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த மாணிக்கம் நாராயணன், “ரஜினிகாந்த் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தி புரொமோட் செய்துகொள்ள வேண்டும் என்று ஒரு வழிமுறையை வைத்திருக்கிறார். அது ஓரளவு உண்மை என்றுதான் கூறவேண்டும். ரஜினிகாந்த் என்னை தவறாக கூட நினைத்துக்கொள்ளலாம். காவிரி பிரச்சனை வரும்போது கூட தன்னைத்தானே எப்படி காப்பாற்றிக்கொள்வது என்று பார்ப்பார். அந்த அளவுக்கு அவருக்கு சாமர்த்தியம் தெரிந்திருக்கிறது.
எல்லா மனிதர்களுக்கும் சுயநலம் இருக்கத்தான் செய்கிறது. சுயநலத்தை மீறி ஒரு மனிதன் வேலை பார்க்க வேண்டும் என்றால் அவன் காஞ்சி பெரியவாவாவோ இல்லை கடவுளாகவோத்தான் இருக்க வேண்டும். அப்படி ஒரு கடவுளாக ஏன் ரஜினியை பார்க்கிறார்கள். அவர் ஒரு நடிகர், உங்களை அவர் என்டெர்டெயின் செய்கிறார். அவரை எதற்கு நீங்கள் தலைவன் என்று கூறுகிறீர்கள்.
அவர் தன்னை தலைவன் என்று கூறுங்கள் என என்றாவது கூறியிருக்கிறாரா? நீங்களே அவரை தலைவனாக்கி, நீங்களே அவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறார் என்று சொல்கிறீர்கள். எல்லாத்துக்கும் காரணமே உங்களிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

உங்களுக்கு வேண்டுமென்றால் அவரை புகழ்வது, வேண்டாம் என்றால் இகழ்வது போன்றவை நீங்கள் ஏற்படுத்திக்கொள்வதுதானே தவிர, அவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் வழிமுறையை நீங்கள் உணர்ந்துகொண்டது உங்களுடைய கெட்டிகாரத்தனம்தான்” என்று அப்பேட்டியில் கூறியுள்ளார்.




