தமிழ் சினிமாவில் நாகேஷ் காமெடி நடிப்பில் கொடி கட்டிப் பறந்தவர். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் என இருவரது படங்களிலும் மாறி மாறி நடித்தவர். நகைச்சுவை நடிப்பில் மட்டுமின்றி குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் அசத்துபவர். குறிப்பாக திருவிளையாடல் படத்தில் தருமி கேரக்டர் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி கேரக்டர் என நடிப்பில் பிச்சி உதறியிருப்பார்.
நடிகர் நாகேஷை பொருத்த வரை எம்ஜிஆர் சிவாஜி கணேசன் காலத்தில் மட்டுமல்ல, ரஜினி கமல் காலத்திலும் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார். படிக்காதவன் படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்திருப்பார். தில்லுமுல்லு படத்தில் ரஜினிக்கு மீசை வைச்சா இந்திரன் மீசை இல்லேன்னா சந்திரன் என ஐடியா கொடுப்பதே நடிகர் நாகேஷ்தான்.
நடிகர் கமல்ஹாசன், சினிமாவில் தனது குருநாதர் என்று இருவரை தான் இன்று வரை குறிப்பிட்டுச் சொல்வார். ஒருவர் சிவாஜி கணேசன். மற்றொருவர் நாகேஷ்தான். மைக்கேல் மதன காமராஜன் நம்மவர் தசாவதாரம் அபூர்வ சகோதரர்கள் என பல படங்களில் நடிகர் நாகேஷை தன்னுடன் கமல் நடிக்க வைத்திருந்தார்.
ஆனால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட வேண்டிய நடிகர் நாகேஷ், அந்தளவுக்கு அவரை தமிழ் சினிமா துறை கௌரவிக்கவில்லை. அவருக்கு உரிய அங்கீகாரம் தரவில்லை என்ற ஆதங்கம் அப்போதே இருந்திருக்கிறது. இதுகுறித்து ஒருமுறை வானொலி நேர்காணலில் பங்கேற்ற நடிகர் நாகேஷிடம் ஒரு கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு நடிகர் நாகேஷ் கூறியதாவது, ஒரு கட்டடம் கட்டும்போது சுவர் எழுப்பிய பிறகு சவுக்கு கட்டைகளை கொண்டு சாரம் கட்டிதான் அதற்கு மேலே சுவரை எழுப்புவார்கள், சாரத்தில் நின்றுதான் சுவருக்கு வண்ணம் பூசுவார்கள். ஆனால் கட்டடப் பணி முழுமையாக முடிவடைந்த பிறகு அந்த சாரத்தை அகற்றி விடுவார்கள். ஏதாவது ஒரு இடத்தில் அந்த சவுக்கு கட்டைகளை மறைவாக வைத்து விடுவார்கள்.
அப்புறம் வீட்டுக்கு முன்புறம் வாழைமரங்கள் தோரணங்கள் கட்டி வண்ண விளக்குகள் போட்டு அலங்கரிப்பார்கள். ஆனால் அந்த பில்டிங் கட்ட உதவிய சாரம் கட்டிய சவுக்கு கட்டைகள் வீட்டுக்கு பின்புறம் கவனிப்பாரன்றி ஒரு ஓரத்தில் கிடக்கும். இது இயற்கை தான். சாதாரணமாக நடப்பதுதான். கட்டிடம் உயரமாக நிற்கிறதே, அதுதான் நமக்குப் பெருமை என்று அந்த வானொலி நேர்காணலில் நடிகர் நாகேஷ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





