இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குடும்பஸ்தன் திரைப்படம். ராஜேஷ் காளிசாமி இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், கதாநாயகனாக நடித்திருந்தார் மணிகண்டன். குரு சோமசுந்தரத்திற்கும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே மணிகண்டன் குட் நைட் என்னும் அருமையான திரைப்படத்தை கொடுத்திருந்தார். குறட்டையை மையப்படுத்தி ஜாலியாக எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போன்றுதான் லவ்வர் திரைப்படமும் மணிகண்டனுக்கு வெற்றியை கொடுத்தது. 2கே கிட்ஸ்களுக்கு ஏற்ற வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்ற சூழலில், மணிகண்டனுக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது குடும்பஸ்தன் திரைப்படம். காதல் கல்யாணம் செய்து கொள்ளும் இளைஞர், குடும்ப வாழ்க்கைக்குள் நுழையும்போது, என்னென்ன தடைகளை எல்லாம் சந்திக்கிறான் என்பதை மிக சுவாரசியமாக தனது எழுத்து மூலம் காட்டியிருந்தார் இயக்குனர்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர், திருமணம் முடிந்ததும் படும் பாட்டையும், பொருளாதார ரீதியாக சிக்கித் தவிப்பதையும் குடும்பஸ்தன் திரைப்படம் கண்முன்னே காட்டி இருந்தது. அதேசமயம் எந்த ஒரு காட்சியையும் மிகவும் சோகமாகவும், ரசிகர்களை வேதனைப்படுத்தும் வகையிலும் இயக்குனர் வைக்கவில்லை. அதுதான் இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கதை சற்று சோகமாக இருந்தாலும் அதை எந்தசுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் கொடுக்கலாம் என்பது யோசித்து அதை வெற்றிகரமாக குடும்பஸ்தன் படக்குழு செய்து காட்டியது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கோடிகளை குவித்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சினிமா விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்தது. இப்படியான சூழலில் இந்த படத்தில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் பேட்டி அளித்த மணிகண்டன்தான் இதை கூறி இருக்கிறார். அதில், முதலில் இந்த திரைப்படத்தின் கதை நடிகர் அசோக் செல்வனுக்கு சென்று இருக்கிறது. ஆனால் அவருக்கு அந்த சமயத்தில் கால்ஷீட் இல்லாததால், அவரே எனக்கு கால் செய்து இந்த திரைப்படத்தை பற்றி கூறினார். அப்போது நான் குட் நைட் ஷூட்டிங்கில் இருந்தேன். என்னிடம் வந்து, இயக்குனர் ராஜேஷ் கதை தெரிவித்ததும் நான் ஒப்புக்கொண்டேன். இப்படியாகத்தான் குடும்பஸ்தன் வளர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.





