நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் இன்றும் உச்ச நடிகராக கொடி கட்டிப் பறக்கிறார். அவரது கூலி படம் வருகிற 14ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது. 74 வயதிலும் சூப்பர் ஸ்டாராக அவரை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். கூலி படம் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் தமிழ் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இயக்குனர் கே பாலசந்தர்தான் நடிகர் ரஜினிகாந்தின் குருநாதர். அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை அவர்தான் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தனது படங்களில் ரஜினியை முக்கிய கேரக்டர்களில் நடிக்க வைத்தார். கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. கமல் மற்றும் ரஜினியுடன் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
குறிப்பாக ரஜினியுடன் பல படங்களில் ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். 16 வயதினிலே போக்கிரி ராஜா ஜானி மூன்று முடிச்சு அடுத்த வாரிசு நான் அடிமை இல்லை ஆடுபுலி ஆட்டம் இராணுவ வீரன் சால்பாஸ் என்கிற இந்தி படம் உட்பட ரஜினியுடன் 18 படங்களில் ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். இதில் பல படங்களில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு காதல் ஏற்பட்டுள்ளது. பல படங்களில் அவருடன் நடித்த போது அவருடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதையடுத்து நடிகை ஸ்ரீதேவியிடம் தனது காதலை சொல்ல நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து ரஜினியின் குருநாதர் இயக்குனர் கே பாலசந்தர் ஒருமுறை நேர்காணலில் பங்கேற்ற போது வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ஸ்ரீதேவியிடம் தனது காதலை நேரில் சொல்ல நடிகர் ரஜினிகாந்த் ஒருமுறை அவரது வீட்டுக்கு நேரில் சென்றார். அப்போது அந்த வீட்டில் கிரகப் பிரவேசம் நடந்துக்கொண்டு இருந்தது. ரஜினி அந்த வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்கள் மின்சார தடை ஏற்பட்டு அந்த வீடு முழுவதும் இருளில் மூழ்கியது. இந்த சம்பவம் ரஜினி மனதுக்குள் நெருடலை ஏற்படுத்தி விட்டது.
கடவுள் பக்தியிலும் ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் கொண்ட ரஜினிக்கு, திடீரென அந்த வீட்டில் ஏற்பட்ட மின்தடை அபசகுனமாக மனதில் பட்டுவிட்டது. காதலை சொல்ல வந்த நேரத்தில் கெட்ட சகுனமாக மின்தடை ஏற்பட்டு விட்டதால், ஸ்ரீதேவியிடம் தனது காதலை சொல்லாமலேயே அவர் திரும்பி வந்து விட்டார் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் கே பாலசந்தர் கூறியிருக்கிறார்.
இந்த தகவல் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





