கேரளாவை சேர்ந்தவர் சுவாசிகா. மலையாளத்தில் நிறைய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சில படங்களில் நடிகை சுவாசிகா நடித்திருக்கிறார். ஆனால் பெரிய அளவில் அவர் ரசிகர்களின் கவனத்தை அந்த படங்களில் ஈர்க்கவில்லை. அந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இதற்கு பின் கடந்தாண்டில் வெளியான லப்பர் பந்து படத்தில் நடிகை சுவாசிகா நடித்திருந்தார். அட்டக்கத்தி தினேஷின் மனைவியாக யசோதா என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். அவரது மகள்தான் படத்தின் நாயகியாக இருந்தார். படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாண், சுவாசிகாவின் மகளை காதலிப்பதுதான் லப்பர் பந்து கதையாக இருந்தது.
இந்த படத்தில் சுவாசிகா நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. கிரிக்கெட் விளையாடுவது மட்டுமே முக்கியம் என குடும்பத்தை கவனிக்காத கணவனிடம் போராடும் ஒரு மனைவியாக சுவாசிகா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதே நேரத்தில் ஒரு குடும்பத் தலைவியாக நல்ல மருமகளாக ஒரு பொறுப்பான தாயாகவும் நேர்த்தியான நடிப்பை தந்திருந்தார்.
லப்பர் பந்து படம் அபார வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து மாமன் படத்தில் சூரியின் அக்கா கேரக்டரில் சுவாசிகா நடித்திருந்தார். அதே போல் ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள கருப்பு படத்திலும் சுவாசிகா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்னும் சில படங்களிலும் அவர் கமிட் ஆகி நடித்துக்கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகை சுவாசிகா கூறியதாவது, நான் 15 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருந்து வருகிறேன். நான் இதுவரை பாலியல் தொந்தரவு சார்ந்த எந்த ஒரு பிரச்சனையையும் சந்திக்கவில்லை. இந்த பாலியல் பிரச்னை என்பது சினிமாவில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் நடக்கிறது. இதை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும்.
பெண்கள் வாழ்வில் முன்னேற தைரியமாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் வளைந்து செல்லக்கூடாது. ஒருவர் தவறாக நடக்க முயன்றால் அவர்களை எதிர் கொள்ளவும், தைரியாக எதிர்க்கவும், சமூகத்தின் முன் நிறுத்தவும் பெண்கள் தயங்கவே கூடாது என்று அந்த நேர்காணலில் நடிகை சுவாசிகா பெண்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.





