நடிகர் விஜய் இதுவரை 69 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் 68 படங்கள் திரைக்கு வந்துவிட்டன. விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர இருக்கிறது. இதுதான் விஜயின் கடைசி படமாக இருக்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக நடிகர் விஜய் அரசியல் களத்தில் இப்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நாளை மதுரையில் தவெக கட்சியின் 2வது அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. மிக பிரமாண்டமாக நடக்கும் இந்த மாநாட்டில் பல லட்சம் மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி இன்று வெளியிட்ட ஒரு வீடியோவில் நடிகர் விஜய் குறித்த ஒரு புதிய தகவலை கூறியிருக்கிறார். இதுபற்றி மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, நடிகர் விஜய் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். எனினும் அவர் நடித்த படங்களில் சில படங்கள் மட்டுமே அவரை பெரிய அளவில் மனதளவில் பாதித்திருக்கிறது.
இதுகுறித்து விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் ஒருமுறை கூறும்போது, விஜய் எந்த படத்தில் நடித்தாலும் அவுட்டோரில் இருந்து போன் செய்து படம் குறித்து என்னிடம் பேச மாட்டார். ஆனால் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் நடித்த போதும், பாசில் இயக்கத்தில் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த போதும் போனில் என்னிடம் பேசுவார்.
அப்போது அந்த நாளில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் குறித்தும் அந்த காட்சிகள் குறித்தும் என்னிடம் வியப்பாகவும் அந்த சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ளும் விதமாகவும் அந்த தகவல்களை கூறுவார். அப்படி மற்ற படங்களில் நடித்த போதும், அந்த படக்காட்சிகள் குறித்தோ, இயக்குனர்கள் குறித்தோ பெருமையாக பேசியது இல்லை என்று எஸ்ஏசி கூறியதாக, ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் நடித்த படங்களில் பூவே உனக்காக படமும் காதலுக்கு மரியாதை படமும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற வெற்றிப் படங்களாகும். இந்த 2 படங்களும்தான் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் மிகச்சிறந்த ஒரு இடத்தை பெற்றுத் தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினி, அதாவது நடிகர் அஜீத்குமாரின் மனைவி அன்று நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதான் ஷாலினி நாயகியான அறிமுகமான முதல் தமிழ் படமாகும்.





