செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “காதல் கொண்டேன்”. இத்திரைப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்ததையும் இத்திரைப்படம் இப்போதும் பேசப்பட்டு வரும் திரைப்படம் என்பதையும் பலரும் அறிவார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட் ஆனது. இப்போதும் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய பாடலாக இத்திரைப்படத்தின் ஆல்பம் இருக்கிறது. “தேவதையை கண்டேன்”, “மனசு ரெண்டும் பார்க்க”, “தொட்டு தொட்டு போகும் தென்றல்”, “காதல் காதல் காதலின் நெஞ்சம்” ஆகிய பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்த பாடல்களாக வலம் வருகின்றன.
இத்திரைப்படத்தில் ஆதி கேசவன் என்ற கதாப்பாத்திரத்தில் சுதீப் சாரங்கி என்பவர் நடித்திருந்தார். இவர் “காதல் கொண்டேன்” திரைப்படம் மட்டுமல்லாது “என்னவோ பிடிச்சிருக்கு”, “காதலே ஜெயம்” போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

வட இந்தியாவை சேர்ந்த சுதீப் சாரங்கி பல ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அதே போல் சில பெங்காலி மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் டாக்சி ஓட்டுநராக இருக்கிறார் என்று அவர் காக்கி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பகிர்ந்த இணையவாசிகள் சுதீப் சாரங்கி சினிமா வாய்ப்பு கிடைக்காமல் டாக்சி ஓட்டுகிறார் என்று பரப்பி வருகின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது சுதீப் சாரங்கி இப்போதும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அவ்வாறு ஒரு விளம்பர படத்தில் அவர் டாக்சி டிரைவராக நடித்துள்ளார். அந்த புகைப்படத்தைத்தான் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இப்புகைப்படம்தான் தவறான தகவலுடன் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.





