திறமைசாலிகளாக இருப்பவர்கள் எப்போதுமே மற்றவர்களின் திறமையை மதிப்பார்கள். அவர்களை அங்கீகரிக்கவும் ஊக்கப்படுத்தவும் தயங்க மாட்டார்கள். ஏனெனில் திறமை என்பது எவ்வளவு பெரிய புத்திசாலித்தனம் என்பதை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் திறமையாளர்களை கண்டால் பொறாமைப்படுவார்கள்.
எப்படியாவது அவர்கள் திறமையால் முன்னுக்கு வந்துவிடுவார்கள் என்பதால், அவர்களை கவிழ்க்க நேரம் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். ஏனெனில் திறமையற்றவர்களால், திறமைசாலிகளை பார்த்து அச்சப்படுவதே இதற்கு காரணம். ஏனெனில் அவர்களிடம் சரக்கு இல்லாத போது சரக்கு இருப்பவர்களை பார்த்து கோழைகளாக அவர்களை தோற்க வைக்க முயற்சிப்பார்கள்.
தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் போன்ற உச்சபட்ச திறமைசாலிகள், நல்ல கலைஞர்களை கண்டால் அவர்கள் மீது அதிக அக்கறை அன்பு காட்டுவார்கள். அவர்களது வளர்ச்சிக்கு தன்னால் ஆன உதவிகளை செய்வார்கள். இதே குணம் நடிகர் எம்ஜிஆரிடம் இருந்தது. நடிகர் விஜயகாந்திடமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களால் வளர்ந்த கலைஞர்கள் ஏராளமான உள்ளனர்.
காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான எம்எஸ் பாஸ்கர், ஒரு கட்டத்துக்கு பிறகு ஒரு மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் நேர்த்தியான அழுத்தமான நடிப்பை தரும் அற்புதமான கலைஞர் எம்எஸ் பாஸ்கர்.
அதனால்தான் தனது தசாவதாரம் படத்தில் 10 கேரக்டர்களில் அந்த அமெரிக்க வில்லன் கமலுடன் நடிகர் எம்எஸ் பாஸ்கரை மொழி பெயர்ப்பாளராக பல காட்சிகளில் நடிக்க வைத்திருப்பார் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் நடிகர் எம்எஸ் பாஸ்கருக்கு பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கமல் போனில் அழைத்து எம்எஸ் பாஸ்கரிடம் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறியதாவது, நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபோது கமல் சார் எனக்கு போன் செய்திருந்தார். அப்போது நான் சூட்டிங்கில் இருக்கிறேன் அண்ணா என்று சொன்னேன். சரி நியூஸ் எல்லாம் பார்ப்பது இல்லையா என்று கேட்டார். அதற்கு நான் பார்க்கிறேன் அண்ணா, எனக்கு தேசிய விருது கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன். உடனே அவர் ஏன் என்று கேட்டார். நான் அதற்கு ஏன் கொடுத்தார்கள் என்று கேட்கிறீர்களா? என்று கேட்டேன். இல்லை ஏன் இவ்வளவு லேட் என்று சொல்லிவிட்டு விருது வாங்கியதால் வேலையிலும் சின்சியாரிட்டியிலும் கொஞ்சம் கூட குறை வைத்து விடக்கூடாது என அறிவுரை சொன்னார் என்று எம்எஸ் பாஸ்கர் கூறியிருக்கிறார்.





