நடிகர் கமல்ஹாசனின் சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனம் மூலமாக, கமல்ஹாசன் அவர் நடிக்கும் பல படங்களை சொந்தமாக தயாரித்திருக்கிறார். அதுமட்டுமின்றி நல்ல கதைகள் என்றால் பிற ஹீரோக்கள் நடிக்கும் படங்களையும் தயாரிப்பது வழக்கம்தான்.
இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தை, கமல்ஹாசன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். கடந்த 16ம் தேதி, அமரன் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியானது.
டீசரில் இடம்பெற்ற சில காட்சிகள் இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிராக இருப்பதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அமரன் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மற்றொரு புது விவகாரமும் அந்த டீசரில் கிளம்பியிருக்கிறது. இதில் ராணுவ அதிகாரியாக நடித்துள்ள சிவகார்த்திகேயன், ஒரு தகாத கெட்ட வார்த்தை, அதாவது லியோ படத்தில் நடிகர் விஜய் பேசியது போல ஒரு வார்த்தையை பேசியிருக்கிறார். இது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பயங்கர சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சூழலில், அமரன் படத்தின் படப்பிடிப்புக்காக, ராணுவ முகாம்களில் நடிகர் சிவகார்த்திகேயன், டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினர் அனுமதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் பெருமையை சொல்லும் வாழ்க்கை கதை என்று கூறிதான் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் படத்தில் இதுபோன்ற ஆபாச வார்த்தை இடம்பெற்றது, ராணுவ அதிகாரிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், கதாநாயகன் சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு, ராணுவ உயரதிகாரிகள் தரப்பில் மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இப்படி வசனம் இடம்பெற்றுள்ளதே என கேட்ட நிலையில், அதற்கு இருவரும் வருத்தம், மன்னிப்பு தெரிவித்து பதில் மெயில் அனுப்பியுள்ளனர். படத்தில் இந்த காட்சி இடம்பெறாது எனவும் அதில் கமல், சிவகார்த்திகேயன் அவர்களுக்கு உறுதியளித்துள்ளனர்.





